இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறைக் கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. கரோனா காரணமாக 2019 ஆம் ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகள் தள்ளி இந்த விருது அறிவிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2021 ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் தமிழில் சிறந்த தமிழ்ப் படம் - கடைசி விவசாயி (மணிகண்டன்), சிறப்பு விருது - நல்லாண்டி (கடைசி விவசாயி), சிறந்த பின்னணி பாடகி - ஸ்ரேயா கோஷல் (மாயவா தூயவா... - இரவின் நிழல்), தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருது - 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' (இந்தி), இதுபோக திரைப்படம் சாராத குறும்பட பிரிவில் - ஸ்ரீகாந்த் தேவா (கருவறை), சிறப்பு கல்வித் திரைப்படத்திற்கான விருது - பி.லெனின் (சிற்பிகளின் சிற்பங்கள்) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின், தேசிய விருது பெற்ற தமிழ் கலைஞர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதோடு, காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்குத் தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருது அறிவிக்கப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சர்ச்சைக்குரிய திரைப்படம் என நடுநிலையான திரை விமர்சகர்களால் புறக்கணிக்கப்பட்ட திரைப்படத்துக்குத் தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருது அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இலக்கியங்கள், திரைப்படங்களுக்கு அளிக்கும் விருதுகளில் அரசியல் சார்புத்தன்மை இல்லாமல் இருப்பதுதான் அந்த விருதுகளைக் காலங்கடந்தும் பெருமைக்குரியவையாக உயர்த்திப் பிடிக்கும். மலிவான அரசியலுக்காகத் தேசிய விருதுகளின் மாண்பு சீர்குலைக்கப்படக் கூடாது” என விமர்சனம் செய்துள்ளார்.
இதனிடையே 2021 ஆம் ஆண்டு வெளியாகி இந்தியளவில் பெரிதும் பேசப்பட்ட சார்பட்டா பரம்பரை, ஜெய் பீம், கர்ணன் உள்ளிட்ட படங்களுக்குத் தேசிய விருது கொடுக்காமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதில் ஜெய் பீம் படம் ஆஸ்கார் விருதுக்காக இறுதி பட்டியல் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.