Skip to main content

“இது கலைஞரின் கோட்டம் மட்டுமல்ல, என் தாய் என் தந்தைக்கு எழுப்பிய அன்பு கோட்டை” - முதல்வர் நெகிழ்ச்சி

Published on 21/06/2023 | Edited on 21/06/2023

 

Chief Minister Stalin spoke eloquently about the kalaignar kottam

 

திருவாரூர் அடுத்துள்ள காட்டூரில் கலைஞரின் தாயார் நினைவிடத்திற்கு அருகிலேயே தாயாளு அம்மாள் அறக்கட்டளையின் சார்பில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டது. அதனை நேற்று (20.06.2023) முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய சகோதரி செல்வியுடன் இணைந்து திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், தமிழ்நாட்டு அமைச்சர்கள் துரைமுருகன், ஏ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், எம்.பிக்கள் கனிமொழி, திருச்சி சிவா, டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட கலைஞரின் குடும்பத்தினரும் உடனிருந்தனர்.

 

கலைஞர் கோட்டத்தை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் திறந்து வைப்பதாக இருந்தது. அதனால் திறப்பு விழாவுக்கான கல்வெட்டும் தயார் நிலையில் இருந்தது. ஆனால் திடீர் உடல்நலக் குறைவினால் நிதிஷ்குமார் வர முடியாமல் போனதால் தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலினே திறக்கச் சொல்லி கட்சியின் மூத்த நிர்வாகிகளும் கலைஞர் குடும்பத்தினரும் பணித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின் தனது சகோதரி செல்வியோடு திறந்து வைத்தார். அதேபோல முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதல்வர் தேஜஷ்வி யாதவ் திறந்து வைத்து கலைஞரின் புகைப்படங்கள், சிலையைக் கண்டு பிரமித்தார். பிறகு விழா மேடைக்கு வந்த பீகார் துணை முதல்வருக்கு ஸ்டாலின் ஏலக்காய் மாலை அணிவித்து தேர் ஒன்றையும் பரிசாக அளித்தார்.

 

கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “வான் புகழ்கொண்ட வள்ளுவருக்கு கோட்டம் கண்ட தலைவருக்கு திருவாரூரில் கோட்டம் எழுப்பப்பட்டிருக்கிறது. இது கோட்டம் மட்டுமல்ல, என் தந்தைக்கு என் தாய் எழுப்பிய அன்பு கோட்டை. கலைஞர் உடல் நலிவுற்றிருந்தபோது நானும் எனது சகோதரியும் இந்த நிலத்தை விலைக்கு வாங்கினோம். இதில்தான் தற்போது தாயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் இந்தக் கோட்டம் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோட்டம் இவ்வளவு சிறப்பாக அமையக் காரணம் ஏ.வ.வேலுதான். கோட்டத்தை பார்த்துப் பார்த்துச் செதுக்கினார். அவருக்கும் கோட்டம் அமையக் காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றியை காணிக்கையாக்குகிறேன்.

 

கலைஞர், தான் பிறந்த ஊரான திருக்குவளையை காதலித்தார். அதேநேரம் அவர் எத்தனை தொகுதிகளில் போட்டியிட்டிருந்தாலும் இறுதியாக வந்தது திருவாரூருக்குத்தான். திருவாரூரைத்தான் தனக்குப் பிடிக்கும் என்பார். திருவாரூரை என்றைக்கும் அவர் மறந்ததில்லை. அவர் வழியிலேயே திராவிட மாடல் ஆட்சியை காணிக்கையாக நடத்திக் கொண்டிருக்கிறேன். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சிக்கு வர முடியாமல் போனது என வருத்தம் தெரிவித்தார் நிதிஷ்குமார். இந்திய அரசியலில் ஆளுமையாக இருந்தவர் கலைஞர். ஜனநாயகம் என்பது வீட்டுக்கு விளக்கு மாதிரி. சர்வாதிகாரம் என்பது காட்டுத் தீ மாதிரி. அதை அணைக்க வேண்டும். மீண்டும் பாஜகவை ஆள அனுமதிப்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே நல்லதல்ல. வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாம் தயாராவோம். 40 நமதே! நாடும் நமதே!” என்று பேசி முடித்தார்.

 

அதற்கு முன்பு முத்துவேலர் நூலகத்தைத் திறந்து வைத்துப் பேசிய பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், “சமூக நீதிக்கான நமது வருங்காலப் போராட்டங்களுக்கு கலைஞரின் கொள்கைகளும், வழிகாட்டுதல்களும், அவர் கடைப்பிடித்த சமூக நீதியும், சமத்துவமும், அவர் கடைப்பிடித்த கொள்கைகளையும் தேசிய அளவில் செயல்படுத்துவது மிக அவசியம். திராவிடக் கருத்துகளை நிலைநிறுத்தியதில் முக்கியத் தலைவராக விளங்கியவர் கலைஞர். அவரின் கொள்கைகளும், சிந்தனைகளும் இன்றைய காலத்தில் அவசியமாக இருப்பதை நினைவுகூறவே இங்கு நாம் கூடியிருக்கிறோம். கலைஞரின் சிந்தனைகளும், கருத்தியலும் அடுத்தடுத்த தலைமுறையிடம் செல்வாக்கு பெற்று வருகிறது. சமூக நீதியைக் காப்பதில் முதன்மையானவராக இருந்தவர் கலைஞர். கலைஞரின் ஆட்சிமுறை தேசிய அளவில் பின்பற்றப்படுகிறது” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்