தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டத் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் ஆய்வுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நேற்று (09/03/2022) நடைபெற்றது.
இதனை தொடர்ந்து வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தபோது, "நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு கொடுத்த இடங்களில் 95 சதவீத இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். பட்டாம்பாக்கம், குறிஞ்சிப்பாடி, நெல்லிக்குப்பம.
ஆகிய 3 இடங்களில் பேரூராட்சி துணைத்தலைவர் பதவியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்வுரிமைக் கட்சிக்கு ஒதுக்கினார்.
கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தி.மு.க. கட்சியின் பொறுப்பாளர்கள் வெற்றி பெற்றுஇருந்தால் பதவி விலகிக் கூட்டணிக்கு இடம் தருமாறு மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனை ஏற்று பல இடங்களில் தி.மு.க.வினர் பதவி விலகி கூட்டணி கட்சியினருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க.வினர் ஒருவர் கூட பதவி விலகவில்லை. எனவே, தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை பெற்றுத் தருமாறு தமிழக முதல்வருக்கு நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்.
உள்ளாட்சித் தேர்தலில் எங்களுக்கு சொற்பமான இடங்கள்தான் ஒதுக்கப்பட்டது. அந்த இடங்களில் நாங்கள் 95 சதவீதம் வெற்றி பெற்றுள்ளோம். எனவே, எங்களுக்கு ஒதுக்கிய இடங்களில் வாழ்வுரிமை கட்சியின் பிரதிநிதிகள் பதவி அமர்த்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தேர்தலில் இடங்கள் ஒதுக்கீடு விஷயத்தில் எங்களுக்கு சரியாக ஒத்துழைப்பு அளிக்காமல், தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சில முக்கிய அமைச்சர்கள் எங்கள் கட்சியினரை காயப்படுத்தி விட்டனர். எங்கள் வலியை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லவே இதை நான் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இனி வரும் காலங்களில் இது போல் நடைபெறாமல் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேகதாது அணை விவகாரம் குறித்து தமிழக முதல்வர் உடனே அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும். விஓ அலுவலகத்தில் பெண் அலுவலர்கள் இயற்க்கை உபாதைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, அங்கு சுகாதாரமான கழிப்பிடம் அமைக்க வேண்டும். கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.