தமிழ்நாட்டில் மத்திய அரசு பங்களிப்புடன் பல்வேறு துறைகளில் செயல்படுத்தி வரும் திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்றிட வளர்ச்சித் திட்டப் பணிகளை மாநில அளவில் கண்காணிக்கக் கூடிய, வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த குழுவின் ஆலோசனைக் கூட்டம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம், ஜல் ஜீவன் திட்டம், அனைவருக்கும் கல்வி மற்றும் தொழிலாளர் நலத்திட்டங்கள் மற்றும் மாநில அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, கே.என். நேரு, மா. சுப்பிரமணியன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உதயநிதி ஸ்டாலின், வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவில் உறுப்பினராக இருக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களான டி.ஆர். பாலு, எஸ்.எஸ். பழனிமாணிக்கம், திருநாவுக்கரசர், தொல். திருமாவளவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.