கரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் நாளை (24/05/2021) முதல் ஒரு வார காலத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், முழு ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (23/05/2021) காலை 11.30 மணிக்கு காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, "மாவட்டங்களில் கரோனாவைக் குறைக்க ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் கரோனா சங்கிலியை உடைக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனாவுக்கு கூடிய விரைவாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் முழு திறமையையும், அனுபவத்தையும் பயன்படுத்த வேண்டும். 'ஈகோ' பார்க்காமல் மாவட்ட அதிகாரிகள் செயல்பட வேண்டும். யார் பெரியவர்? யார் அதிகாரத்துக்கு கட்டுப்படுவது? என பார்க்காமல் மாவட்ட ஆட்சியர்கள் செயல்பட வேண்டும். ஏனென்றால் அனைவரையும் விட கரோனா பெரிது என்பதால் அதற்கு தகுந்தாற்போல் செயல்படுங்கள். முழு ஊரடங்கால் கடைகள் மூடப்படுவதால் வாகனங்களில் காய்கறிகள், பழங்கள் விற்பனையை உறுதி செய்ய வேண்டும். நெல்லை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் முதியவர்கள் கரோனா தடுப்பூசிப் போடுவதை அதிகரிக்க வேண்டும். கரோனா இல்லாத சூழலை உருவாக்க மாவட்ட ஆட்சியர்களால் மட்டுமே முடியும்" எனக் கூறினார்.
இந்த ஆலோசனையில் அமைச்சர்கள், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, தமிழக காவல்துறை டி.ஜி.பி. திரிபாதி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், பல்வேறு துறையைச் சேர்ந்த உயரதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.