வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி மண்டலம் 27வது வார்டு மாநகர கவுன்சிலராக வெற்றி பெற்றிருப்பவர் திமுகவை சேர்ந்த சதிஷ். இவர் மீதுதான் அடிதடி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய தேடிவருவதால் கவுன்சிலர் தலைமறைவாகியுள்ளார்.
வேலூர் சத்துவாச்சாரியில் வசித்து வரும் சதிஷின் தந்தை ஜெய்சங்கருக்கு இரண்டு மனைவிகள். முன்னாள் அதிமுக கவுன்சிலரான ஜெய்சங்கர் தனது இரண்டாவது மனைவி குடும்பத்தை சத்துவாச்சாரியில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கவைத்துள்ளார். 10 ஆண்டுகாலமாக அந்த வீட்டில் அவர்கள் தங்கிவந்துள்ளனர். வீட்டின் உரிமையாளர் சென்னையில் வசிக்கும் வாசன் என்பவருடையது. அவர் தனது வீட்டை விற்பனை செய்ய முடிவு செய்தவர், வீட்டை காலி செய்யச்சொன்னதாக கூறப்படுகிறது. சதிஷின் தந்தை வீட்டை காலி செய்ய மறுத்துள்ளார். பலஆண்டுகாலமாக குடியிருந்துவருகிறோம், குடியிருப்பவருக்கே வீடு சொந்தம் என ரூல்ஸ் பேசியுள்ளனர், பல மாதங்களாக இந்த பஞ்சாயத்து நடந்துவந்துள்ளது.
இந்நிலையில் ஏப்ரல் 22ஆம் தேதி காலை வீடு காலி செய்யச்சொல்லி வாசன் தனது உறவினர்கள் உட்பட சிலருடன் காரில் அந்த வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. அவர்களை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லையாம். இந்ததகவல் ஜெய்சங்கருக்கு தெரிந்து அவர் தனது ஆட்கள் சிலரை காரில் அங்கே அனுப்பியுள்ளார். அதற்குள் அவர்கள் வீட்டுக்குள் புகுந்துள்ளனர், இதனால் இருதரப்புக்கும் அடிதாடியாகியுள்ளது. வீட்டின் உரிமையாளர் மற்றும் அவர்களுடன் சென்னையில் இருந்து வந்தவர்களுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிசிக்கைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் சத்துவாச்சாரி காவல்நிலையத்தில் புகார் தந்ததன் அடிப்படையில் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்கிறார்கள்.
இதுக்குறித்து சதிஷ் கருத்தறிய தொடர்புக்கொண்டபோது அவரது எண் ஸ்விச் ஆஃப் செய்து வைக்கப்பட்டிருந்தது. இந்த பிரச்சனை தொடர்பாக சதிஷ் ஒரு ஆடியோ பேசி சமூகவளைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அதில் அந்த வீடுக்காக நாங்கள் சில லட்சம் அட்வான்ஸ் தந்துள்ளோம். அதை தரமறுப்பதாலே காலி செய்யவில்லை. இதுக்குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. வீட்டை காலி செய்யச்சொல்லி மிரட்டினார்கள், நான் யாரையும் அடிக்கவில்லை. திருநங்கையை நான் அடித்தாக கூறுகிறார்கள். திருநங்கைகளுக்கு நான் யார் என்று தெரியும். அவர்களும், பெண்களும் என்னை நல்லவன் என்றே சொல்வார்கள். இதன்பின்னால் அரசியல் உள்ளது. அவர்கள் இதன்பின்னால் இருந்து திட்டமிட்டு என்மீது வழக்கு பதிவு செய்யவைத்து சிக்கவைத்துள்ளார்கள். நான் வேறு ஒரு அணி என்பதால் சிக்கவைத்துள்ளார்கள் என்கிறார்.
உட்கட்சி பிரச்சனையால் சிக்கவைக்கப்பட்டுள்ளாரா என திமுகவினரிடம் விசாரித்தபோது, மாவட்ட நிர்வாகிகள் சிலருடன் ஏற்பட்ட முரண் காரணமாக இந்த பிரச்சனையில் சிலர் சொல்லித்தான் சதிஷ் மீது வழக்கு போடவைத்துள்ளார் என்கிற எண்ணத்தில் ஆடியோவில் பழிவாங்குகிறார் என்கின்றனர். அதேபோல் இந்த விவகாரம் 5 மாதத்துக்கு முன்பே பஞ்சாயத்துக்கு வந்தபோது, அந்த வீட்டை காலி செய்து தந்துடுங்க எனச்சொல்லியும் சதிஷ் குடும்பம் செய்யவில்லை என்கிறார்கள்.
இந்நிலையில் சதிஷ் தரப்பு இரண்டு வீடியோக்களை வெளியிட்டுள்ளது. அதில் சிலர் கார் மூலமாக வீட்டுக்கு வருவதும், வீட்டு வாசலில் அமர்ந்து இருந்த பெண்மணியிடம் பேசுவது, மற்றொரு வீடியோவில் ஒரு பெண் வீட்டுக்குள் வருவதும், ஒரு திருநங்கை வீட்டுக்குள் வந்து ஊஞ்சலில் அமர்ந்து ஆடுவதும் போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது.
வேலூர் மாநகராட்சியை அடுத்த பெருமுகை ஊராட்சியில் அந்த ஊராட்சிக்கு சொந்தமான 100 ஏக்கர் வருவாய்த்துறை புறம்போக்கு இடம் உள்ளது. இந்த இடத்தில் ஒருமாதத்துக்கு முன்பு அந்த கிராம ஊராட்சிமன்ற தலைவர், துணைதலைவருடன் சேர்ந்துக்கொண்டு அப்பகுதி பொதுமக்கள் சிலரிடம் லட்சங்களில் பணம் வாங்கிக்கொண்டு வீட்டுமனை தருவதாக கூறி பணம் வசூல் செய்துள்ளனர். அந்த இடத்தை சுத்தம் செய்து அளவீடுகள் செய்யதுவங்கியுள்ளனர். இதுக்குறித்த புகார் சமூக ஆர்வலர்கள் வழியாக வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு சென்றதன் மூலம் அவர்கள் நேரடியா வந்து பார்த்து விசாரித்துவிட்டு எச்சரித்து, வீட்டுமனை போடுவதை தடுத்தனர். இந்த பிரச்சனையில் திமுகவில் சிலர் சம்மந்தப்பட்ட தலைவர், துணைதலைவருக்கு ஆதரவாக இருந்தனர். அந்த வீட்டுமனை விவகாரத்தின் பின்னணியில் இவரும் இருந்தார் என்கிறார்கள்.