தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன துறையின் வளர்ச்சிக்கு தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும் (07-01-24) மற்றும் நாளையும் (08-01-24) நடைபெறுகிறது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வரவேற்புரை ஆற்றினார். இந்த விழாவில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கலந்துகொண்டுள்ளார். மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜல்லிக்கட்டு காளை சிலையை நினைவுப் பரிசாக வழங்கினார்.
இதையடுத்து முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் தொழில் கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்நிகழ்வில் செமி கண்டக்டர் கொள்கைகள் வெளியிடப்பட்டன. இந்த மாநாட்டில் தொழில் முதலீட்டை ஈர்க்கும் விதமாக வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழிலதிபர்கள் பங்கேற்றுள்ளனர். பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளது. மாநாட்டில் 50 நாடுகளைச் சேர்ந்த 450க்கும் மேற்பட்ட சர்வதேசப் பிரதிநிதிகள், உலகப் புகழ்பெற்ற 170 பேச்சாளர்கள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டில் தொழில் கருத்தரங்குகள், வணிக ஈடுபாடுகள் தொடர்பான கண்காட்சிகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேசுகையில், “கலாச்சாரம், இயற்கை எழில் கொஞ்சும் மாநிலமாக தமிழகம் உள்ளது. இந்தியாவில் தமிழகத்தின் பெருமையை பறைசாற்றும் வகையில் நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநரான நிஹர் ஷாஜிக்கு எழுந்து நின்று பாராட்டுவோம்.‘மாநிலங்களின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி’ என பிரதமர் மோடி கூறி வருகிறார். அனைத்து மாநிலங்களும் வளர வேண்டும் என பிரதமர் மோடி கவனம் செலுத்தி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த கடும் சவால்களை எதிர்கொண்டோம். பொருளாதாரத்தில் ஒரு டிரில்லியன் டாலர் என்ற இலக்கை எட்டினால் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாகும். ஒரு டிரில்லியன் டாலர் இலக்கை வைத்து செயல்படும் முதல்வர் மு.க. ஸ்டாலினை பாராட்டுகிறேன்” எனத் தெரிவித்தார்.