அரசு ஊழியர்களின் ஒரு நாள் ஊதியமான 5 கோடி ரூபாயை கேரள வெள்ள நிவாரணத்திற்கு அளிக்கப்பட உள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரவிற்கு புதுச்சேரி அரசு ஏற்கனவே 1 கோடி ரூபாய் நிவாரண நிதி தருவதாக அறிவித்துள்ளது. மேலும் அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களுடைய ஒரு மாத ஊதியத்தை கேரள நிவாரணத்திற்கு தருவதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடமிருந்து பெறப்பட்டுவரும் நிவாரணப் பொருட்கள் மற்றும் நிவாரண நிதியை கேரளாவிற்கு அனுப்புவது தொடர்பாக முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் மாநில அவசரகால சேவை மையத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜஹான், தலைமை செயலாளர் அஸ்வனி குமார், மாவட்ட ஆட்சியர், வணிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது :- கேரளாவில் கடும் மழையால் இதுவரை 7 லட்சம் மக்கள் வீடுகளை இழந்தும், 357 பேர் மழை வெள்ளத்தால் உயிர் இழந்தும் உள்ளனர். அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக 2000 தங்கும் விடுதியில் தங்கி உள்ளனர். இதுவரை கேரளாவில் ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவிகள் செய்வதற்காக புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புதுச்சேரியில் உள்ள அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களுடைய ஒரு நாள் ஊதியத்தை கேரள வெள்ள நிவாரணத்திற்கு அளிப்பதற்கு முடிவு செய்து கடிதம் அளித்துள்ளனர். அதன் மூலம் 5 கோடி ரூபாய் நிதி கிடைக்கும். அதனை உடனடியாக அனுப்ப ஏற்பாடு செய்யப்படும். பொது நிறுவனங்கள், தனியார் மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரி உட்பட ஊழியர்களும் தங்களது ஒரு நாள் சம்பளம் வழங்க முடிவு செய்து உள்ளனர்.