ஊரடங்கு நேரத்தில் தீ விபத்தில் வீடு இழந்த தொழிலாளி குடும்பத்துக்கு வீடு கட்டி கொடுத்து உபயோக பொருட்கள் வழங்கிய அரசு மருத்துவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
ஊரடங்கு நேரத்தில் விவசாய வேலைக்கு சென்ற தொழிலாளியின் கூரை வீடு தீ பற்றி எரிந்துவிட்ட நிலையில் அந்த குடும்பத்திற்காக தனது சொந்த செலவில் கூரை வீடு கட்டிக் கொடுத்து வீட்டுக்குத் தேவையாக வீட்டு உபயோகப் பொருட்கள், மற்று அனைவருக்கும் புதிய உடைகள் வாங்கி கொடுத்து மனிதம் வாழ்கிறது என்பதை காட்டி இருக்கிறார் அரசு மருத்துவர் சௌந்தராஜன். அரசு மருத்துவரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை அடுத்த செங்கமங்கலம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் சத்யா,ராஜேஸ்வரி தம்பதிகள். விவசாயக் கூலித் தொழிலாளியான இவர்களுக்கு மாற்றுத்திறனாளி குழந்தை உள்பட மூன்று குழந்தைகள் உள்ளன.
ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் வேலையில்லாமல் உணவுக்கே தவித்தவா்கள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சத்தியாவும், ராஜேஸ்வரியும் அருகில் உள்ள வயலில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அவா்களின் வீடு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த மாற்றுத் திறனாளி குழந்தை உள்பட மூன்று குழந்தைகளையும் மீட்டதோடு தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பாத்திரங்கள், துணிகள் என அனைத்து பொருள்களும் எரிந்து நாசம் அடைந்தது. கட்டிய துணியோடு நின்றார்கள். குடிசை வீடு முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. இதையறிந்து வந்த பேராவூரணி வட்டாட்சியர் க.ஜெயலெட்சுமி அரசின் சார்பில் நிவாரணப் பொருட்களை வழங்கினார். செங்கமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வம், அதிமுக ஒன்றியச் செயலாளர் துரை. மாணிக்கம் ஆகியோரும் நிவாரண உதவிகளை வழங்கினர்.
இந்நிலையில், தீ விபத்து குறித்து அறிந்த, செருவாவிடுதி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரும், பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தரராஜன் நேரில் சென்று அந்த குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதோடு, உடனடி உதவிகளை வழங்கினார். வீடு இழந்து தவிக்கும் அந்த குடும்பத்திற்கு வீடு கட்டிக் கொடுக்கவும் முன்வந்தார்.
அடுத்த சில நாட்களில் உடனடியாக தென்னங்கீற்றுகளால் புதிய கூரை வீடு கட்டிமுடிக்கப்பட்டது. மேலும் குடும்பத்தினருக்கு தேவையான உடைகள், வீட்டு உபயோக பொருட்கள், சமையலுக்கு தேவையான பாத்திரங்கள், பழங்கள், பிஸ்கட், பால் ஆகியவற்றை ஞாயிற்றுக்கிழமை அன்று டாக்டர் வி. சௌந்தரராஜன் நேரடியாகச் சென்று அந்தக் குடும்பத்தினருக்கு வழங்கினார். சுமார் 25 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வீடு, வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்றை பெற்றுக் கொண்ட தம்பதிகள் கண்ணீர் மல்க டாக்டர் சௌந்தரராஜனுக்கு நன்றி தெரிவித்தனர். உடனடியாக பால் காய்ச்சி வீட்டில் குடி புகுந்தனர்.
இதையடுத்து ஊராட்சிமன்றத் தலைவர் செல்வம் வீடு கட்டி தந்தமைக்காக டாக்டருக்கு பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தார். அப்போது சமூக ஆர்வலர் கே.கான் முகம்மது, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் எஸ்.சந்திரசேகரன், ஊரணி கல்வி மற்றும் சுகாதார அறக்கட்டளை பொருளாளர் ராஜூ, சுகாதார செவிலியர் லில்லி மேரி மற்றும் கிராமத்தினர் உடனிருந்தனர்.
இது குறித்து பேராவூரணி ஜகுபர் கூறும் போது, வட்டார மருத்துவ அலுவலர் செருவாவிடுதி சௌந்தராஜன் தொடக்கத்தில் இருந்தே ஏழைகள் மீது பற்றுக் கொண்டவர். அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை நோயாளிகளுக்க சிற்ந்த சிகிச்சை அளித்து ஆலோசனைகள் சொல்வதுடன் அவர்களின் வசதிக்காக செருவாவிடுதி மேம்படுத்தபட்ட அரசு ஆரம்ப சுகாமார நிலையத்தில் வளைகாப்பு திருவிழாவை தொடங்கி, வாரம் ஒரு முறை சத்தான உணவுகளை வழங்கினார். அதன் பிறகு தமிழக அரசே அந்த திட்டத்தை செயல்படுத்த தொடங்கிவிட்டது. இப்பொதும் சுகாதரா நிலையத்தில் காய்கறித் தோட்டம் அமைத்து இயற்கையான காய்கறி மற்றும் பால், முட்டைகளை ஏழை கர்ப்பிணிகளுக்கு வழங்கி வருகிறார். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் சர்க்கரை, உப்பு, இன்னும் ஏனைய நோய்களுக்காக சிகிச்சையும், தொடர்ந்து மாத்திரை வாங்கிய பொதுமக்களுக்க தடையில்லாமல் மாத்திரையும் சோதனைகளும் கிடைக்கும் விதமாக மருத்துவக்குழு அமைத்து வீட்டுக்கு வீடு சென்ற ஆய்வுகள் செய்து மருந்து மாத்திரை வழங்கி வருகிறார்கள். அவருடன் அவரது குழுவினர் துணையாக இருப்பதால் அவரால் அனைத்துப் பணிகளும் சிறப்பாக செய்ய முடிகிறது.
இப்போது வீ்ட்டை இழந்து தவித்த ஏழை தொழிலாளி குடும்பத்திற்கு வீடு கட்டிக் கொடுத்து வீட்டுக்கு தேவையான பொருட்கள், துணிகள் வழங்கியுள்ளது மனிதம் வாழ்கிறது என்பதை காட்டுகிறது. அதனால் அனைவரும் அவரை பாராட்டி வருகின்றனர். இப்படியும் ஏராளமான மருத்துவர்கள், அரசு ஊழியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நக்கீரன் சார்பிலும் பாராட்டுகள்.