
'கோடைகாலம்' என்றாலே நீர் நிலைக்கு இரையாகும் உயிர்கள் எண்ணிக்கை என்பது அதிகரிப்பது வாடிக்கையாகி வருகிறது. அதற்கு முந்தைய காலங்களில் நிகழ்ந்த சம்பவங்களே சாட்சி.
கோடை காலங்களில் நீர் நிலைகளில் குளிக்க செல்பவர்கள் குறிப்பாக பள்ளி சிறுவர்கள், கல்லூரி மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். இந்நிலையில் நடப்பு ஆண்டில் கோடைக் காலம் தொடங்கி இருக்கும் இந்த சூழலில் பெற்றோர்களும் மாணவர்களும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.
தமிழகத்தில் 12, 11, 10 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் முடிந்த நிலையில் 6 முதல் 9 ஆம் வகுப்பிற்கான ஆண்டு இறுதி தேர்வுகள் முடிந்ததால் பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அறிவிப்பின்படி நாளை முதல் (ஏப்ரல் 26 ) ஜூன் ஒன்றாம் தேதி வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கோடைவிடுமுறை முடிந்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் ஜூன் 2ஆம் தேதி திறக்கப்படும். ஏப்ரல் 30ஆம் தேதி ஆசிரியர்களுக்கு கடைசி பணிநாள் எனவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கும் வகையில் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தல்களை வழங்க சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக மாணவர்கள் நீர்நிலைகளில் குளிக்கக் கூடாது. நீர்நிலையில் குளிக்க மாணவர்களை பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டாம். கோடையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் சிறார்களை உச்சிவெயில் நேரத்தில் வெளியில் அனுப்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.