கடலூர் மாவட்டம் பெண்ணாடம் வடக்கு ரத வீதியில் அமைந்துள்ளது கற்பூர விநாயகர் கோயில். அதே பகுதியைச் சேர்ந்த முத்து என்பவர் கோயில் பூசாரியாக இருந்து நாள்தோறும் சுவாமிக்கு பூஜைகள் செய்து கோயிலைக் கவனித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று (21.08.2020) பூசாரி முத்து வழக்கம்போல கோயில் பூஜைகளை முடித்துவிட்டு கோயிலை பூட்டி வீட்டிற்குச் சென்றுள்ளார். இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் அதிகாலை 3 மணி அளவில் சிறப்புப் பூஜை செய்வதற்கு வந்து பார்த்தபோது, கோயிலின் முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அதனைத் தொடர்ந்து கோயிலின் உள்ளே சென்று பார்த்தபோது மூலவர் அருகில் உள்ள இரண்டு உண்டியல்களும் உடைக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கைப் பணம் அனைத்தும் திருடு போயிருந்தது.
அதையடுத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் முக்கியஸ்தர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு, பெண்ணாடம் காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தார். அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற பெண்ணாடம் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு, உண்டியலை உடைத்துப் பணத்தைத் திருடிச் சென்றது குறித்து வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்துப் பணம் திருடப்பட்டிருப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.