
தமிழகம் முழுவதும் கடந்த மாதம் அமலாக்கத்துறை தீவிரமாக ரெய்டு நடத்தியது. இதில், டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்களை சப்ளை செய்யும் சிவா டிஸ்டிலரீஸ் நிறுவனம் தொடர்புடைய பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை நடத்தியது. இந்த சோதனையின் முடிவில், டாஸ்மாக்கிற்கு மதுபான சப்ளை செய்ததில் பல ஆயிரம் கோடி வரை அந்நிறுவனம் முறைகேடு செய்திருப்பதற்கான ஆவணங்களைக் கைப்பற்றியது.
இது குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதன் அடிப்படையில், சிவா டிஸ்டிலரீஸ் அதிகாரிகளிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல உண்மைகளை தெரிவித்திருப்பதாக தகவல்கள் கசிகின்றன. இந்த தகவல்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை டாஸ்மாக் உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
டாஸ்மாக் எம்.டி. விசாகன் ஐ.ஏ.எஸ், பொது மேலாளர் சங்கீதா உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நேற்று சம்மன் அனுப்பப்பட்டது. அவர்களிடம் நேரடி விசாரணையை தொடங்குவதற்கு முன்பு, மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் விசாரணை நடத்துவதற்காகத் தான் சிவா டிஸ்டலரிஸ் நிறுவனத்தினரிடம் அமலாக்கத்துறை இன்று விசாரணை நடத்தியிருக்கிறார்கள் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.