
காஷ்மீருக்குச் சுற்றுலா சென்ற பயணிகள் மீது கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் கொடூரமாகத் தாக்குதல் நடத்தினர். காஷ்மீரின் பஹல்காமில் நடந்த இந்த தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் நடத்திய, பயங்கரவாதிகளை தேடும் பணியில் இந்திய பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அதே வேளையில், இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்த குதிரை ஓட்டி, திருமணமாகி தேனிலவுக்குச் சென்ற விமானப் படை அதிகாரி, கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபர் என பல கனவுகளோடு காஷ்மீருக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் பயங்கரவாத தாக்குதலில் கொடூரமாகக் கொல்லப்பட்டிருப்பது நாட்டையே கலங்க வைத்துள்ளது. பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க தங்களது வேதனைகளைத் தெரிவித்து வருவது பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. இந்த தாக்குதலில், ஆண்கள் மட்டும் குறிவைக்கப்பட்டதாகவும், இந்துவா? முஸ்லிமா? என்று மதத்தைக் கேட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் வாயிலாக தகவல் வெளியாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து கொல்லப்பட்டவர்களின் உடல்கள் அவர்களது சொந்த ஊருக்குக்கு அனுப்பி வைக்கப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெற்று முடிந்திருக்கிறது.
இந்த நிலையில், காஷ்மீரில் தங்களுக்கு உதவி செய்த இரண்டு பேர் சகோதரர்களாக கிடைத்துள்ளதாக தாக்குதலில் உயிரிழந்தவரின் மகள் தெரிவித்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த ஆரத்தி என்பவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘சுற்றுலாவிற்காக இரட்டை மகன்கள் மற்றும் தந்தையோடு காஷ்மீருக்குச் சென்றோம். பயணத்தின் இரண்டாவது நாளான ஏப்ரல் 22அம் தேதி பைசரன் புல்வெளியில் குதிரை சவாரி செய்து கொண்டிருந்தோம். அப்போது, துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டன. இதனை கேட்ட அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினர். பதற்றமடைந்த நானும் எனது குடும்பத்தினரும், குதிரைகளில் இருந்து குதித்து வேலி வழியாக ஊர்ந்து சென்று ஒரு இடத்தில் இருந்தோம்.
அப்போது துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதி எங்களை நோக்கி சுட்டார். நான் ஒளிந்து கொள்ள வேறு இடத்தைத் தேடியபோது, என்னுடைய தந்தை ராம்சந்திரம், என்னை அமைதியாக அங்கேயே இருக்கச் சொன்னார். அதன் பின்னர் அந்த பயங்கரவாதி எங்களை நோக்கி வந்து, ஒரு இஸ்லாமிய வசனத்தை சொன்னார். அவர் என்ன சொல்கிறார் என்று எங்களுக்குப் புரியவில்லை என்று நாங்கள் சொன்னபோது, அவர் என் தந்தையைச் சுட்டார். நான் உடனே அப்பாவின் உடலை கட்டிபிடித்தபோது, அந்த நபர் என்னை நோக்கி துப்பாக்கியை காட்டினான். இதை பார்த்த என் குழந்தைகள் அழுத போது, அந்த நபர் அங்கிருந்து சென்றான். அதன் பின்னர், நானும் எனது மகன்களும் காட்டின் வழியாக ஊர்ந்து சென்று ஒரு ரிசார்ட்டை அடைந்தோம். அங்கு, எங்களை இந்திய ராணுவம் பாதுகாத்தது. தந்தையின் உடலை கண்டுபிடிப்பதற்கு பிணவறைக்குச் சென்ற போது, காஷ்மீர் டாக்ஸி ஓட்டுனர்கள் முசாஃபிர் மற்றும் சமீர் ஆகியோர் எனக்கு பெரும் உதவி செய்தனர். அவர்கள் பிணவறையில் என்னுடன் இருந்தார்கள், என்னுடன் காத்திருந்தார்கள். விமான நிலையத்தில், எனக்கு இப்போது காஷ்மீரில் இரண்டு சகோதரர்கள் இருக்கிறார்கள் என்று நான் அவர்களிடம் சொன்னேன்’ என்று உருக்கமாக தெரிவித்தார்.