வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு செய்ய வழிவகை செய்யும் வகையில், கடந்த அதிமுக ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் திமுக ஆட்சியில் 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு சட்டம் அரசாணையில் வெளியிடப்பட்டது. ஆனால் இதனை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
இந்த நிலையில், 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு தொடர்பாக ஆராயப் புள்ளி விவரத் தரவுகளைத் திரட்ட முதல்வர் ஸ்டாலின் குழு ஒன்றை அமைத்திருந்தார். தற்போது அந்தக் குழுவும் தங்களின் அறிக்கையை இறுதி செய்யும் நிலையில் உள்ளது. இந்த நிலையில்தான் இது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.