மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 10 இணைச் செயலாளர்கள் பணியிடம், 35 இயக்குநர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் பணியிடம் என மொத்தம் 45 அதிகாரிகள் நேரடி நியமனம் (Lateral Entry) மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. இட ஒதுக்கீடு இல்லாமல் யுபிஎஸ்சி இந்த நியமனங்களை மேற்கொண்டிருப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என திமுக, காங்கிரஸ் எனப் பல்வேறு அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு தங்களது கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தன.
அதே சமயம் மத்திய அரசின் இந்த நேரடி நியமனத்திற்கு பாஜகவின் கூட்டணிக் கட்சியான லோக் ஜனசக்தி கட்சியில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இத்தகைய சூழலில் தான் நேரடி நியமனம் மூலம் அதிகாரிகளை நியமிக்கும் நடைமுறையை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இதுகுறித்து யு.பி.எஸ்.சி. அமைப்பின் தலைவருக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுதியிருந்த கடிதத்தில், “வேலைவாய்ப்புகளில் சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் நேரடி நியமன நடைமுறை இருக்க வேண்டும் என்பதில் பிரதமர் உறுதியாகவுள்ளார். அதனால் நேரடி நியமன முறை ரத்து செய்யப்படுகிறது” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாகத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “இந்தியா கூட்டணியின் கடும் எதிர்ப்பிற்குப் பிறகு நேரடி நியமனத்தின் மூலம் ஆட்சேர்ப்பு தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. இது சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி ஆகும். மத்திய பாஜக அரசு பல்வேறு வடிவங்களில் இடஒதுக்கீட்டைக் ஒழிக்க முயற்சிப்பதால், நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டின் 50% உச்சவரம்பை உடைக்கப்பட வேண்டும். மேலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் இனத்தவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது அவசியம் ஆகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.