தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது. அதன்படி மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (25.10.2024) மதியத்தில் இருந்து பெய்துவரும் கனமழை காரணமாக வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். அதோடு கனமழை காரணமாக வைகை ஆற்றில் மழைநீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது.
மதுரையில் உள்ள பல்வேறு கண்மாய்களில் நீர் நிரம்பியுள்ளதால் குறிஞ்சி நகர், சர்வேயர் காலனி, முல்லை நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை வெள்ளம் புகுந்துள்ளது. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் தங்க இடமில்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மதுரையில் இன்று மாலை 3 மணி முதல் 03.15 வரையிலான 15 நிமிடத்தில் 4.5 செ.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. காலை 08.30 - மாலை 05.30 இடைப்பட்ட 9 மணி நேரத்தில் 9.8 செ.மீ மழை பொழிந்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் முல்லை நகரில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், சு. வெங்கடேசன் எம்.பி. ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் மதுரையில் கனமழை பெய்து வருவதையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (25.10.2024) மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதாவை தொலைப்பேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு கனமழையை ஒட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்துக் கேட்டறிந்தார். மேலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென்றும் களத்திற்குச் சென்று சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்திக்கும், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கும், மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு அக்டோபர் மாதத்தில் மதுரை மாநகரம் அதிக மழையைச் சந்தித்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1955ஆம் ஆண்டில் அக்டோபர் 17ஆம் தேதி மதுரை நகரில் 115 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது. அதன் பின்னர் தற்போது 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு அக்டோபரில் 100 மி.மீ.க்கு மேல் மழைப் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.