‘அரசியல் சடுகுடு’ என்ற தலைப்பில் நக்கீரன் நடத்தி வரும் நேர்காணலில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துகளை அரசியல் விமர்சகர்கள் பலர் பேசி வருகின்றனர். அந்த வகையில் தி.மு.க. பேச்சாளர் நாஞ்சில் சம்பத் அ.தி.மு.க. கட்சியின் தற்போதைய நிலையை விளக்குகிறார்.
சமீபத்தில் அ.தி.மு.க. கட்சியின் 53வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டமாக இல்லாமல் திண்டாட்டமாக இருந்து, பழைய பூங்கொத்தை கொடுத்து அவர்களாகவே அதை கொண்டாட்டமாக சொல்லிக்கொண்டனர். வரும் தேர்தலில் அக்கட்சி உண்மையாகவே வெற்றி பெற வேண்டும்மென்றால் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலகி பெரிய தியாகத்தை செய்ய வேண்டும். அப்படி அவர் செய்தால்தான் அ.தி.மு.க. வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது. 2019ஆம் ஆண்டு அவர் தலைமையேற்ற பிறகு அடுத்து வந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெருகிறது. அதற்கு முன்பு இருந்த அ.தி.மு.க. அமோகமாக வெற்றி பெற்று இருந்தது. இனி வரும் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி தொகுதியில் நின்றால்கூட ஜெயிக்க முடியாது. பழனிசாமி தலைமையேற்று அ.தி.மு.க.வை வழிநடத்தினால் எந்த தொகுதியிலும் ஜெயிக்க முடியாது. இதை கடைக்கோடி தொண்டன் வரையிலும் உணர்ந்துவிட்டார்கள். அதனால்தான் எதிர்பார்த்த அளவிற்கு அ.தி.மு.க.வின் 53வது ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்படவில்லை.
ஒரு பக்கம் வேலுமணி, தங்கமணி, சி.வி. சண்முகம் போன்றவர்கள் கட்சியை ஒருங்கிணைக்க தொடங்கிவிட்டனர். இடையூராக இருப்பது எடப்பாடி பழனிசாமி மட்டும்தான். இடையூரை அப்புறப்படுத்தவும் அவர்கள் தயாராகி விட்டார்கள். ஏனென்றால் நன்றி கெட்டவனுக்கு விமோட்சனம் கிடைக்காது. சொந்தமாக நின்று ஊராட்சிமன்றத் தலைவராக ஆகமுடியாத எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கிவிட்டு சிறை வாசம் சென்றார் சசிகலா. அவரை விடுதலை செய்ய சட்ட ஆலோசனை மேற்கொண்டு எடப்பாடி பழனிசாமி முயற்சி எடுத்திருக்கவேண்டும். அதைவிட்டுவிட்டு சசிகலா சிறை சென்றதும் எடப்பாடி பழனிசாமி அவரை தூக்கி வீசினார். இப்படி செய்த எடப்பாடி பழனிசாமியை கண்டிப்பாக அ.தி.மு.க. தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள்.
சிறை சென்று வந்த சசிகலாவுக்கு தொண்டர்கள் வழிநெடுக உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அந்த வரவேற்பை சசிகலா பயன்படுத்தி அ.தி.மு.க. அலுவலகத்திற்கு சென்றிருந்தால் எடப்பாடி பழனிச்சாமியால் வழி மறித்திருக்க முடியுமா? சமீபத்தில் தென்காசிக்கு சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அங்கு ஏன் கலெக்டர் அலுவலகத்தையும் எஸ்.பி அலுவலகத்தையும் திறக்கவில்லையென்று கேள்வி கேட்கிறார். அதன் பின்பு இரண்டே நாளில் அந்த அலுவலகங்கல் திறக்கப்பட்டது. இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் உண்மையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சசிகலாவா? எடப்பாடி பழனிச்சாமியா என்ற கேள்வி எழுகிறது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கட்சி தோல்வியை அடைந்த பின்னர் மாவட்ட, ஒன்றிய, நகர செயல்வீரர்கள் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு பேருக்காக ஒரு ஆலோசனை கூட்டத்தைக் கூட்டி அவர் பக்கம் யார் யார் இருக்கிறார்கள் என்று பார்த்தவர் தான் எடப்பாடி பழனிச்சாமி. இந்த ஆலோசனை கூட்டங்கள் நடத்துவதற்கு பதிலாக பழைய பூங்கொத்தை வாங்கிக் கொண்டு இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறார். கண்டிப்பாக அவரால் கட்சியை வழி நடத்த முடியாது. முன்பு இருந்தே எடப்பாடி பழனிசாமிக்கும் செம்மலைக்கும் ஆகாது. ஏனென்றால் நியமாக செம்மலை தான் முதல்வராக ஆகியிருக்க வேண்டும். அ.தி.மு.க.வில் சீட்டு கிடைக்காதபோதுகூட சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றவர் செம்மலை. அவரிடம் சென்று ரகசியமா கேட்டால் எடப்பாடி பழனிச்சாமியை நீக்கினால்தான் அ.தி.மு.க.-வை காப்பற்ற முடியும் என்று சொல்லிவிடுவார்.