சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் விஷவாயு கசிவால் பாதிப்படைந்து பள்ளி மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கான காரணத்தைக் கண்டறிய முடியாததால் தடயவியல் அறிவியல் துறை அதிகாரிகள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை முதலே மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததாகத் தகவல்கள் கூறப்படுகிறது இதன் காரணமாக மூன்று வகுப்பு மாணவர்கள் சில மணி நேரம் மைதானத்திற்கு வந்து காத்திருந்து பிறகு மீண்டும் வகுப்பறைக்குச் சென்று மதிய உணவு வரை வகுப்பிலிருந்துள்ளனர்.
அதன் பிறகு பிறகு 2 மணி அளவில் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் திடீரென மயக்கம், நெஞ்செரிச்சல், மூச்சு விட முடியாமல் திணறுதல் போன்ற பிரச்சனைகளால் அவதி உற்ற நிலையில் உடனடியாக பள்ளி சார்பில் அவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை வழங்க ஆம்புலன்ஸ் மூலமாகவும், பள்ளி வாகனங்கள் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதன்படி அருகில் இருக்கும் அரசு மருத்துவமனை தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் 35 மாணவ மாணவிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டதில் 28 மாணவர்கள் இரண்டு மணி நேரத்தில் இல்லத்திற்குத் திரும்பினர்.
தொடர்ந்து ஏழு மாணவர்களுக்குச் சுவாச பிரச்சனை மற்றும் கண் எரிச்சல் இருப்பதால் தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே இந்த விஷவாயு பரவ காரணம் பள்ளியின் உள்ளே இருக்கும் ஆய்வகத்தில் இருந்து வெளியேறிய வாயு என முதலில் தகவல் கூறப்பட்டது. ஆனால் காவல் துறை அதிகாரிகள், தேசிய பேரிடர் மீட்புக் குழு அதிகாரிகள் தடயவியல் அறிவியல் துறை அதிகாரிகள், மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் உடனடியாக பள்ளி வளாகத்திற்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார்கள். அதில் முதற்கட்ட தகவலாக பள்ளியில் உள்ள ஆய்வகத்தில் இருந்து எந்தவித வாயுப்பசிவும் ஏற்படவில்லை என்றும் மேலும் பள்ளியின் மூன்றாவது தளத்தில் உள்ள மூன்று வகுப்பறையில் மட்டும் இந்த பாதிப்பு ஏற்பட்டதாகவும் ஆனால் அந்த வகுப்பிற்கும் ஆய்வகத்திற்கும் நீண்ட தொலைவில் இருப்பதாகத் தெரிவித்தனர். இதனால் ஆய்வகத்தில் பிரச்சனை இல்லை என்ற நிலையில் வேறு எப்படி விஷவாயு கசிந்தது என்ற கேள்வி தற்பொழுது எழுந்துள்ளது. வேறு ஏதும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள் கழிவறை, குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்ட இடங்களிலும் ஆய்வு செய்துள்ளனர். அங்கேயும் விஷ வாயு கசிவு தொடர்பாக ஆதாரங்கள் கிடைக்கவில்லை.
இது தொடர்பாகப் பெற்றோர்களிடம் பேசிய போது, “கடந்த இரண்டு நாட்களாகவே தங்கள் பிள்ளைகள் மூச்சு விட பிரச்சனையாக இருந்ததாகவும் எல்லா குழந்தைகளும் மூச்சு விட முடியாமல் சிரமப்படுவதாகவும் வீட்டில் சொல்லியுள்ளனர். இந்த நிலையில் இன்று இரண்டு மணி அளவில் அதீத மூச்சு பிரச்சினை ஏற்படவும் மாணவர்கள் ஆசிரியரிடம் உதவி கேட்ட பிறகு அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. ஆனால் பள்ளியின் தரப்பில் இருந்து பெற்றோர்களுக்கு எந்தவித தகவலும் முறைப்படி வழங்காமல் இருந்துள்ளனர். அருகில் இருந்தவர்கள் தெரிவித்ததன் அடிப்படையில் பதற்றத்தில் பெற்றோர்கள் மருத்துவமனைக்குச் சென்று தங்கள் பிள்ளைகளைப் பார்த்து உள்ளனர். தற்பொழுது 7 மாணவர் மாணவியர்கள் சிகிச்சையில் உள்ளனர் ஆனால் இது எந்த இடத்தில் விஷவாயு ஏற்பட்டது. எப்படி மாணவர்களுக்குப் பிரச்சினை ஏற்பட்டது என்ற கேள்விக்கு தற்போது வரை பதில் இல்லை. இந்த சூழ்நிலையில் பள்ளி நிர்வாகம் நாளை (26.10.2024) பள்ளிக்கு விடுமுறை அறிவித்துள்ளது.