அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் வைத்திலிங்கம் தற்போது தஞ்சாவூர் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருக்கிறார். இவர் 2011 முதல் 2016 ஆண்டு வரை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தபோது தனியார் நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு குடியிருப்புகள் கட்ட அனுமதி வழங்கி கொடுத்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வைத்தியலிங்கம் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக தற்போது அமலாக்கத்துறையினர் வைத்திலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில் நேற்று சேப்பாக்கம் எம்.எல்.ஏ. விடுதியிலுள்ள வைத்திலிங்கத்தின் அறை, அவரின் வீடு உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை நடைபெற்றது.
இது தொடர்பாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் புகழேந்தி நம்மிடம் சில கருத்துகளை பகிர்ந்துகொண்டார். அதில், “இந்த வழக்கில் ‘ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் அண்ட் இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர்’ என்ற நிறுவனம் 58 ஏக்கர் நிலத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவதற்காக ரூ.28 கோடி பணத்தை வைத்தியலிங்கம் வாங்கியிருப்பதாகவும் அந்த பணத்தை முதலீடு செய்திருப்பதாகவும் கண்டறியப்பட்டு தற்போது வழக்கு நடைபெற்று வருகிறது. லஞ்ச ஒழிப்புத் துறையினர் இந்த வழக்கில் பணப் பரிமாற்றம் நடந்திருக்கிறதா? என்பதைக் கண்டறிந்து அமலாக்கத்துறையிடம் வழக்கை ஒப்படைத்துவிடுகின்றனர். அப்படித்தான் இந்த வழக்கில் அமலாக்கத்துறையின் தலையீடு வந்திருக்கிறது. அமலாக்கத்துறையினருக்குக் கைது செய்து சிறையில் அடைப்பதற்கான அதிகாரம் வலுவாக இருப்பதால்தான் பா.ஜ.க. இந்த துறையை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது என்று சொல்லுவார்கள்.
ஓ.பி.எஸ்., வைத்தியலிங்கம் ஆகியோர் இன்றைக்காவது அவர்கள் செய்த தவறை உணர வேண்டும். எப்போதும் இருவரும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டிருக்கின்றனர். ஓ.பி.எஸ்ஸிடம் எவ்வளவு சொன்னாலும் கேட்காமல் பா.ஜ.க. அலுவலகத்திற்கு அவராகவே சென்று கை கட்டி நிற்பார். ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? என்று அவரிடம் கேட்டால் மத்திய அரசு ஆதரவாக இருக்கிறது என்று டயலாக் பேசுவார். ஈரோடு இடைத்தேர்தலின்போது பண்ருட்டி ராமச்சந்திரன், பா.ஜ.க.வுக்கு ஆதரவு வேண்டாம் என்றார். ஆனால் ஓ.பி.எஸ்., வைத்தியலிங்கம் ஆகியோர் அதைக் கேட்கவில்லை. பா.ஜ.க.வுக்கு எதிராகப் பேசவே மாட்டோம் என்று அப்போது வைத்தியலிங்கம் கூறினார்.
தன் மீது போடப்பட்டுள்ள வழக்கில் பா.ஜ.க. உதவாது என்று வைத்தியலிங்கம் உணர வேண்டும். ஏனென்றால் அதற்கான ஆதாரங்களுடன் வழக்குப் போடப்பட்டுள்ள நிலையில், நிரபராதி என்று வைத்தியலிங்கம்தான் நீதிமன்றத்தில் போராடவேண்டும். ஒருமுறை கு.ப.கிருஷ்ணன் ஓ.பி.எஸ்ஸிடம், ஏன் எப்போதுமே பா.ஜ.க.வுடன் இருக்கிறீர்கள்? என்று கூறி சண்டைக்குப் போய்விட்டார். ஆனாலும் ஓ.பி.எஸ் கேட்கவில்லை. அவர் கூடவே பா.ஜ.க.வுக்கு ஆதரவாகப் பேசிய வைத்தியலிங்கத்திற்கு இன்றைக்கு ஆப்பு வைத்துள்ளனர்.
இதுபோல ஓ. பன்னீர்செல்வத்திடமும் ஒரு நாள் அமலாக்கத்துறை சோதனை மேற்கொள்ளத்தான் போகிறார்கள். ஊழல் செய்ததிலிருந்து காப்பாற்றுவார்கள் என்று நினைத்தால் அவர்கள் தங்கள் கண்களையே குத்திக்கொள்கிறார்கள் என்றுதான் அர்த்தம். எடப்பாடி பழனிச்சாமியும் யோக்கியர் கிடையாது. இப்போது அவராலும் பா.ஜ.க-வை எதிர்த்துப் பேச முடியாது. ஏனென்றால் அவரின் நண்பரான இளங்கோவன் கல்லூரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பா.ஜ.க.-வின் திரை மறைவிலிருக்கும் வேலுமணி மற்றும் தங்கமணி பிடியில்தான் எடப்பாடியும் மாட்டிக்கொண்டிருக்கிறார்” என்றார்.