இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்திருந்தது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சித் தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக அவருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இதேபோன்று தமிழகத்தைச் சேர்ந்த பலருக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த பத்ம விருதாளர்களுக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டிலிருந்து நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷன் விருதுக்குத் தேர்வாகியுள்ள மூத்த கலைஞர்கள் வைஜெயந்தி மாலா மற்றும் பத்மா சுப்ரமணியம் ஆகிய இருவருக்கும் எனது வாழ்த்துகள். மேலும் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியுள்ள பத்திரப்பன் (கலை) ஜோஷ்னா சின்னப்பா (விளையாட்டு), ஜோ டி குரூஸ் (இலக்கியம்), சேஷம்பட்டி சிவலிங்கம் (கலை), நாச்சியார் (மருத்துவம்) ஆகியோருக்கும் எனது வாழ்த்துகள்.
தமிழ்நாட்டில் பிறந்து பப்புவா நியூ கினியில் ஆளுநர் பொறுப்பு வரை உயர்ந்த சசீந்திரன் முத்துவேல், அந்தமானைச் சேர்ந்த இயற்கை விவசாயியான செல்லம்மாள் ஆகியோரையும் பத்மஸ்ரீ விருது பெறுவதற்காகத் தமிழனாகப் பாராட்டி மகிழ்கிறேன். அண்மையில் மறைந்த எனது நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்குப் பத்மபூஷன் விருது அறிவித்தமைக்காக எனது நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.