கடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அனைவரும் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று கூறி நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். இதையடுத்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உள்ளிட்ட மத்திய மத்திய அமைச்சர்கள் பலரும் பதிலளித்துப் பேசினர். அந்த வகையில் நிர்மலா சீத்தாராமன் பேசுகையில் 1989 இல் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் சேலையை திமுகவினர் இழுத்ததாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “ மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தது போன்று ஜெயலலிதாவுக்கு சட்டசபையில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. கடந்த 1989 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் ஜெயலலிதா நடத்தியது நாடகம் என்பதை அப்போது அவையில் இருந்த அனைவரும் நன்கு அறிவர். சட்டமன்றத்தில் அப்படி செய்ய வேண்டும் என தனது வீட்டில் அவர் ஒத்திகை பார்த்தார், நான் உடனிருந்தேன் என அப்போதைய அமைச்சர் திருநாவுக்கரசு அவையில் பேசியது இன்றும் அவைக் குறிப்பில் உள்ளது. தமிழ்நாட்டின் சட்டமன்ற பேரவை நிகழ்வை தவறாக திரித்து நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பேசியது வருந்தத்தக்கது. நிர்மலா சீதாராமன் வாட்ஸ் அப் வரலாற்றை படித்துவிட்டு பேசுகிறார்”என நிர்மலா சீதாராமனுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
மேலும், “நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய பிரதமர் மோடி தேர்தல் மேடையில் பேசுவது போல் பேசியுள்ளார். எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்காமல் காங்கிரஸ் கட்சியை மட்டுமே மோடி விமர்சித்துள்ளார். கடந்த 2014 தேர்தலுக்கு முன்னர் என்ன குற்றச்சாட்டுகளை வைத்தாரோ அதே குற்றச்சாட்டை தான் 9 ஆண்டுகளுக்கு பின்னரும் வைத்துகொண்டிருக்கிறார். பிரதமருக்கு தமிழ்நாடு குறித்தும் தெரியவில்லை; தமிழ்நாடு பாஜக குறித்தும் தெரியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.