கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டம் ஒழுங்கு குறித்து 4 மாவட்ட காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு 4 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் தமிழக அரசு விரிவுபடுத்தியுள்ளது. விரிவுபடுத்தும் இந்த திட்டத்தை நாகை மாவட்டம் திருக்குவளையில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் படித்த அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று காலை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் அமர்ந்து உணவு அருந்தினார்.
இந்நிலையில் நாகை மாட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 4 மாவட்ட காவல் அதிகாரிகளுடன் கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வுக் கூட்டம் நடத்தி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களின் சட்டம் ஒழுங்கு குறித்து காவல் துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால், உள்துறைச் செயலாளர் அமுதா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.