பல்வேறு கட்ட நகர்வுகளுக்கு பிறகு நேற்று இரவு 9:30 மணி அளவில் மாமல்லபுரத்தின் அருகே மாண்டஸ் புயலின் வெளிவட்ட பாதை கரையைக் கடக்க துவங்கியது. இதன் காரணமாக மழையுடன் பலத்த காற்று வீசியது. கிட்டத்தட்ட அதிகாலை 3 மணி அளவில் மாண்டஸ் புயல் முழுவதுமாக கரையைக் கடந்தது. இதனை சென்னை வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், புயல் பாதித்த சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதிகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நகர்ப்புற வளர்ச்சிதுறை அமைச்சர் கே.என்.நேரு, சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ், சென்னை ஆணையர் ககன்தீப் சிங் உள்ளிட்டோர் இருந்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை தமிழர் முதல்வர் வழங்கினார். அதேபோல் பாலவாக்கம், கொட்டிவாக்கம் பகுதியிலும் தமிழக முதல்வர் ஆய்வு செய்தார். மக்களிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். அதேபோல் வடசென்னை பகுதிகளிலும் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை தமிழக முதல்வர் ஆய்வு செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.