தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின் அலங்காநல்லூரில் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் கட்டப்படுவதற்காக 3.2.2023 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரூ. 62 கோடியே 77 இலட்சத்து 62 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 18.3.2023 அன்று ஏறுதழுவுதல் அரங்க கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த ஏறுதழுவுதல் அரங்கத்திற்கு ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்’ என்று பெயர் சூட்டப்பட்டது.
மேலும் தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை மூலம் வாடிவாசல், ஒரே நேரத்தில் 5 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து காணும் வசதிகளுடன் மூன்றடுக்குப் பார்வையாளர் மாடம், ஏறுதழுவுதல் நடைபெறும் இடம், மிக முக்கிய விருந்தினர்கள் அமரும் இடம், ஏறுதழுவுதலில் பங்குபெறும் காளைகளின் எழுச்சி வடிவங்களைப் புலப்படுத்தும் அருங்காட்சியகம், ஒலி மற்றும் ஒளி காட்சிக்கூடம், கால்நடை மருந்தகம், நூலகம், மாடுபிடி வீரர்களுக்கான தங்கும் அறைகள், புல்வெளிகளுடன் கூடிய தோட்டம் என அனைத்தையும் கொண்டுள்ள 83 ஆயிரத்து 462 சதுர அடி பரப்புடைய மிகப் பிரம்மாண்டமான கட்டடமாக ஏறுதழுவுதல் அரங்கம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இது, ஒவ்வொரு ஆண்டும் தை மாதங்களில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்திவரும் விவசாயிகளுடன் இணைந்து கட்டப்பட்டுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் பங்கேற்க 500 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த மாடு பிடி வீரருக்கு ரூ.1 லட்சம் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு வருகை தந்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கினை முதல்வர் திறந்து வைத்தார். இதன் ஒரு பகுதியாக மாடு பிடி வீரருடன் கூடிய ஜல்லிக்கட்டு காளை மாட்டு சிலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது அமைச்சர்கள் ஐ. பெரியசாமி எ.வ. வேலு, தங்கம் தென்னரசு, பி. மூர்த்தி, கே.கே.எஸ் எஸ்.ஆர். ராமச்சந்திரன், ரகுபதி, தலைமை செயலாளர் சிவ தாஸ் மீனா ஆகியோர் உடன் இருந்தனர். அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் சிலையையும் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கலைஞர் சிலையுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.