


பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது பிறந்த நாள் விழா மற்றும் 61வது குருபூஜை, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று (30.10.2023) நடைபெற்று வருகிறது. இதனையொட்டி மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், மதுரை மேயர் உள்ளிட்டோரும் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
அதன் பின்னர் முதல்வர் மு.க. ஸ்டாலின், மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மாமன்னர் மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின்போது, அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.எஸ். சங்கீதா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் உடனிருந்தனர்.
அங்கிருந்து சாலை மார்க்கமாக பசும்பொன் சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவில் பங்கேற்றார். அப்போது முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் முதல்வருடன் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் எனப் பலரும் மரியாதை செலுத்தினர்.