சென்னை, அண்ணா மேலாண்மை நிலையத்தில் இன்று (01/10/2021) காலை நடைபெற்ற 2020 - 21 ஆண்டு குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழாவில், குடிமைப்பணி தேர்வு வெற்றியாளர்களுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மனிதவள மேலாண்மைத்துறைச் செயலாளர் மைதிலி கே. ராஜேந்திரன் இ.ஆ.ப., பொதுத்துறைச் செயலாளர் டி. ஜகந்நாதன் இ.ஆ.ப. மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "இந்திய குடிமைப்பணி தேர்வில் (யூ.பி.எஸ்.சி.) வெற்றிபெற்ற தமிழ்நாடு மாணவர்களுக்குப் பாராட்டுகள். அரசுப் பணி என்பது இளைஞர்களால் அதிகம் விரும்பப்படும் பணியாக உள்ளது. அண்ணா மேலாண்மை பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 3,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது" என்றார்.