திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோடை இளவரசியான கொடைக்கானல் பகுதியைக் காண தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள்.
இந்த ஆண்டு, வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அரசியல்வாதிகளும், அரசியல் கட்சித் தலைவர்களும் கோடை இளவரசியான கொடைக்கானலை காண வந்து செல்கிறார்கள். இந்த நிலையில், கோடை வெயிலை தணிக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மாலத்தீவு செல்வதாக இருந்தது. ஆனால், திடீரென அதை ரத்து செய்துவிட்டு கோடை இளவரசி கொடைக்கானலை காண முடிவு செய்தார். அதன் அடிப்படையில், இன்று காலை 29ம்தேதி சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு புறப்பட்ட முதல்வர் அங்கிருந்து கார் மூலமாக கொடைக்கானலில் உள்ள பாம்பார்புரத்தில் இருக்கும் தயாரா ஸ்டார் ஹோட்டலில் மே 4ஆம் தேதி வரை தங்க இருக்கிறார்.
முதல்வர் கொடைக்கானல் வருகையை ஒட்டி கொடைக்கானல் மூஞ்சி கல்லிலிருந்து பாம்பார்புரம் வரும் வரை சாலைகள் பேண்டேஜ் ஒர்க் பார்க்கப்பட இருக்கிறது. அதை தொடர்ந்து, இன்று காலை எட்டு மணி முதல் மதியம் ஒரு மணி வரை வத்தலக்குண்டு காட் ரோடு வழியாக கொடைக்கானல் செல்லும் சாலை போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அதோடு கொடைக்கானல் மலைப்பகுதியில் ட்ரோன்கள், பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் உத்தரவிட்டுள்ளார். அதுபோல், முதல்வர் பாதுகாப்புக்காக எஸ்.பி தலைமையில் இரண்டு ஏ.டி.எஸ்.பி, 2 டி.எஸ்.பி, ரெண்டு இன்ஸ்பெக்டர், பத்து சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
கடந்த 2019ல் பாராளுமன்றத் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே முதன் முதலில் கொடைக்கானலுக்கு முதல்வர் ஸ்டாலின் வந்தவர், அங்குள்ள கால்டன் ஹோட்டலில் ஒரு வாரம் தங்கி இருந்து விட்டு சென்றார். அதன் பின், பாராளுமன்றத் தேர்தல் முடிவில் 40க்கு 39 தொகுதிகளை தி.மு.க கைப்பற்றியது. அதேபோல் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே கொடைக்கானல் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பம்பார்புரம் தமாரா ஸ்டார் ஓட்டலில் தங்கி விட்டு சென்ற பின்பு தான் நூற்றுக்கு மேற்பட்ட சீட்டுகள் வாங்கியதன் பெயரில் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக தற்பொழுது பாராளுமன்ற தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு மாதம் இருக்கும் சூழ்நிலையில் கொடைக்கானலுக்கு முதல்வர் ஸ்டாலின் வந்துள்ளார்.
பாம்பாராபுரத்தில் தங்கிய தமாரா ஹோட்டலில் ஒரு வாரம் குடும்பத்தாருடன் தங்கி ஓய்வெடுக்க இருப்பதால் அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சி பொறுப்பாளர்கள், அமைச்சர்கள் யாரையும் முதல்வர் சந்திக்க விரும்பவில்லை. ஆனால், அரசியல் ரீதியாக மந்திரி சபை மாற்றம் மற்றும் துணை முதல்வராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கொண்டு வருவதற்கான ஆலோசனையும் குடும்பத்தாருடன் பேசி முதல்வர் முடிவெடுக்க இருக்கிறார் என்ற பேச்சும் இருந்து வருகிறது. இப்படி சென்டிமென்ட் மூலம் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து ஒவ்வொரு தேர்தலையும் கொடைக்கானல் வந்து கோடை இளவரசியை ரசித்து விட்டு செல்வது போலத்தான் தற்பொழுதும் கோடை இளவரசியைக் காண கொடைக்கானல் வந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, முதல்வர் வருகையையொட்டி, அங்கு போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.