கடலூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் வரும் டிசம்பர் 29- ஆம் தேதி நடைபெற உள்ள தேர் விழா, டிசம்பர் 30- ஆம் தேதி நடைபெற உள்ள ஆருத்ரா தரிசனம் விழாவை நடத்துவதற்கு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கடலூர் மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.
அதன்படி, 'டிசம்பர் 29- ஆம் தேதி நடைபெறவுள்ள ஆருத்ரா தேர்த் திருவிழாவுக்கு நடராஜர் தேரை இழுக்க 1000 பேருக்கும், சிவகாமி அம்மன் தேரை இழுக்க 400 பேருக்கும், மற்ற தேர்களை இழுக்க 200 பேருக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 30- ஆம் தேதி கோவில் வளாகத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழா நிகழ்ச்சியில் அரசு தெரிவித்துள்ள கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ளவும், குறிப்பிட்ட நேர இடைவெளியை ஒதுக்கீடு செய்து கோயில் வளாகத்தில் ஒரே சமயத்தில் 200 பேருக்கும் மிகாமலும் அனுமதிக்கலாம்.
இந்த திருவிழாவில் கலந்து கொள்ள வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் மார்கழி ஆருத்ரா தரிசனம் திருவிழாவை தங்கள் வீட்டிலிருந்து காணும் வகையில் உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருவிழாவில் 10 வயதுக்குக் கீழான குழந்தைகள் மற்றும் 65 வையதுக்கு கூடுதலான மூத்த குடிமக்கள் பங்கேற்பதைக் கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும். திருவிழாவில் கலந்து கொள்ளும் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.' இவ்வாறு கடலூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.