சிதம்பரம் நடராஜர் கோவிலில் வளாகத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் கொடி மரம் சேதமான நிலையில் அதனை மாற்றி அமைக்கும் பணியில் கடந்த 3-ந் தேதி இந்து அறநிலை துறையினர் மற்றும் கோவில் அறங்காவலர்கள் ஈடுபட்டனர். இதற்கு நடராஜர் கோவில் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இது குறித்து வழக்கு 4-ந் தேதி சிதம்பரம் சார்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதி தற்போது உள்ள நிலையே தொடர வேண்டும், 15 நாட்களுக்கு எந்தவிதமான பணியும் மேற்கொள்ள கூடாது என உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் அனைவரும் கோவிலை விட்டு வெளியே வந்தனர்.
இந்த நிலையில் கோவில் தீட்சிதர்கள் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலுக்கு செல்லும் பிரதான வழியை இரும்பு கதவு வைத்து அடைத்துள்ளனர். இதனால் பல நூற்றாண்டு காலம் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலுக்கு செல்லும் வழி தடைபட்டுள்ளது. இந்த கோவிலில் பூஜை செய்யும் பட்டாசிரியர்கள், கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் தற்போது நடராஜர் கோவில் வழியாகச் சுற்றி செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
நீதிமன்றம் 15 நாட்களுக்கு கொடிமர பணிகளுக்கு மட்டுமே தடை விதித்துள்ளது. ஆனால் தீட்சிதர்கள் நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக கோவிந்தராஜ பெருமாள் கோவிலுக்கு செல்லும் பிரதான வழியை இரும்பு கதவு வைத்து அடைத்துள்ளனர். எனவே இதனைத் திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து புகார் சிதம்பரம் காவல் நிலையத்தில் புதன்கிழமை அளிக்கப்பட்டுள்ளது.