திண்டுக்கல் மாவட்ட திமுக மூத்த முன்னோடிகளைக் கௌரவிக்கும் வகையில் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி திண்டுக்கல்லில் நடைபெற்றது.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் பணியாற்றிய திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 7,000 பேருக்கு தலா 10,000 வீதம் ரூ.7 கோடி மாவட்ட திமுக சார்பில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கழக மூத்த முன்னோடிகளுக்குப் பொற்கிழிகளை வழங்கி கௌரவித்தார்.
விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், தமிழ்நாடு பாடநூல் நிறுவனத் தலைவர் திண்டுக்கல் லியோனி, எம்பி வேலுச்சாமி, மாநகர துணை மேயர் ராஜப்பா உள்பட கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ''திண்டுக்கல் மாவட்டத்திற்குப் பலமுறை வந்துள்ளேன். அமைச்சராகப் பொறுப்பேற்று முதன்முறையாக உங்களைச் சந்திக்க வந்துள்ளேன். இந்த திண்டுக்கல் மாவட்டம் திமுக கோட்டை ஆவதற்குக் காரணம் அமைச்சர் ஐ.பெரியசாமி தான். அவர் கலைஞருடன் பயணித்தவர். ஒரு கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திமுக உள்ளது. திமுகவிற்குத்தான் வரலாறு உள்ளது. மற்ற கட்சிகளுக்கு வரலாறு கிடையாது. திமுகவை குறை சொல்வது ஒன்றுதான் அதிமுகவின் வரலாறு. திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் மாநிலம் முழுவதும் 300 இடங்களில் நடத்தியுள்ளோம்.அதிமுக சந்தர்ப்பவாதம் கொண்ட கட்சி. ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவரும் முதல்வர், துணை முதல்வர் என பங்களிப்போடு இருந்தவர்கள். தற்போது இருவரும் அடித்துக் கொள்கின்றனர். தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகளைத் தொடர்ந்து முதல்வர் நிறைவேற்றி வருகிறார். நேற்று கூட பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. நான் உங்கள் வீட்டுச் செல்லப் பிள்ளையாகவே இருக்க விரும்புகிறேன். தற்போது அமைச்சராக உள்ளதால் கூடுதல் பொறுப்புடன் இருக்கிறேன்'' என்றார்.