Skip to main content

“நீங்க ஏன் ஹிஜாப் போட்டிருக்கீங்க..” - அரசு பெண் மருத்துவரை மிரட்டிய பாஜக நிர்வாகி

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

BJP Member threaten to nagai woman doctor

 

நாகப்பட்டினம் மாவட்டம், திருப்பூண்டி பகுதியில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் கடந்த 24 ஆம் தேதி இஸ்லாமிய பெண் மருத்துவர் இரவு பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி புவனேஷ் ராம் என்பவர், அந்த மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது அந்தப் பெண் மருத்துவர் தங்கள் மத வழக்கப்படி ஹிஜாப் அணிந்துள்ளார். 

 

இதனைக் கண்ட புவனேஷ் ராம், “நீங்க டியூட்டில இருக்கீங்க; உங்க யூனிஃபார்ம் எங்க. நீங்க ஏன் ஹிஜாப் அணிந்து இருக்கீங்க. நீங்க டாக்டர் என்பதே எனக்கு டவுட்டா இருக்கு. எம்.டி. அரவிந்த் டாக்டர் எங்க. இவங்க டாக்டரா? இவங்க டாக்டர் என்பதற்கு என்ன ஆதராம் இருக்கு. ஹிஜாப் அணிந்துகொண்டு கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்காங்க” என மிரட்டல் தொனியில் பேசினார். இதனை அவர் தனது செல்போனிலும் வீடியோவாக பதிவு செய்துள்ளார். 

 

அதேசமயம், அந்த பெண் மருத்துவர் “பெண்கள் பணியில் இருக்கும்போது அசிங்கமாக பேசிக்கொண்டிருக்கிறார். ஒரு பெண் மருத்துவரை அவரின் அனுமதியில்லாமல் வீடியோ எடுத்துக்கொண்டிருக்கிறார்” எனச் சொல்லி அவரும் வீடியோ எடுத்துள்ளார். 

 

இந்த இரண்டு வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதனை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், பாஜக நிர்வாகி புவனேஷ் ராம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். 

 

இந்நிலையில், அரசு மருத்துவரை பணி செய்யவிடாமல், ஏன் ஹிஜாப் அணிந்து இருக்கிறீர்கள் என மிரட்டலாகக் கேட்ட பாஜக நிர்வாகி புவனேஷ் ராம் மீது காவல்துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது புவனேஷ் ராம் தலைமறைவாக உள்ளதால் அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்