58 நாட்களாகப் போராட்டம் நடத்தி வந்த ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள், மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கும் கல்விக் கட்டணத்தையே, இந்த மருத்துவக் கல்லூரியிலும் வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தித் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மாணவர்களின் போராட்டத்துக்குப் பல்வேறு மாணவர் அமைப்புகளும், அரசியல் கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், தமிழக அரசின் உயர்கல்வித்துறைக்கு கீழ் வரும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை சுகாதாரத்துறைக்கு கீழ் கொண்டு வந்து தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில், மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்து, தமிழக அரசு இன்று (04/02/2021) அரசாணையை வெளியிட்டது.
அரசின் கட்டண நிர்ணய உத்தரவை வரவேற்று, போராட்டக் களத்தில் இருந்த ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாகக் கொண்டாடினர். மேலும், 58 நாட்களாக நடத்தி வந்த போராட்டத்தை மாணவர்கள் வாபஸ் பெற்றனர்.