கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே மார்க்சிஸ்ட் கட்சியை சார்ந்த சி. தண்டேஸ்வரர் நல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ள மாரியப்பன் தலைமையில் சிதம்பரம் மார்க்சிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் ராஜா, ஒன்றிய கவுன்சிலர் முருகானந்தம், கிராம பொதுமக்கள் பாலசந்தர், ஷேக்பரீத், அப்துல்கபூர், பரூக், செல்வகணபதி உள்ளிட்ட கிராம முக்கிய பிரமுகர்களுடன் சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயனை சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அந்த மனுவில் சிதம்பரம் வட்டம், சி. தண்டேஸ்வரர் நல்லூர் ஊராட்சி அருகில் நகராட்சி கட்டுப்பாட்டில் குப்பை கிடங்கு செயல்பட்டுவருகிறது. குப்பை கிடங்கு சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நகராட்சி நிர்வாகம் வரையறுக்கப்பட்ட பகுதிக்கு வெளியே குடியிருப்புகளுக்கு அருகில் தனியார் நிலங்களை ஆக்கிரமித்து தொடர்ந்து குப்பைகளை கொட்டி வருகிறது.
மேலும் குப்பைகளை எரித்தும் வருகிறது. இதன் காரணமாக அப்பகுதிகளில் கடுமையாக பாதிக்கப்பட்டு சுற்றியுள்ள குடிசைகள் எரியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குப்பைகளால் கொசு மற்றும் ஈக்கள் அதிகமாக உற்பத்தியாகி காலரா மற்றும் மலேரியா நோய்களை உருவாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக் கழிவுகள் தொடர்ந்து எரிக்கப்படுவதால் டயாக்சின் உள்ளிட்ட நச்சு வாயுக்கள் வெளியீட்டு புற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நிலத்தடி நீர் மாசு ஏற்பட்டு குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு ஆஸ்துமா, மூச்சுத் திணறல், நுரையீரல் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுச்சூழல் மாசுபாடு, உடல்நல பிரச்சினைகளை உருவாக்குகின்ற செயல்பாடுகளை தடுக்க தவறிய சிதம்பரம் நகராட்சி ஆணையர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.