கொடைக்காலம் துவங்கிவிட்ட நிலையில் மக்கள் உடல் வெப்பத்தை தணிப்பதற்கும், வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளவும் பல முன்னேற்பாடுகளை செய்துகொள்வது வழக்கம். பலர் கோடைக்காலங்களில் வெளியில் நடமாடுவதையே தவிர்த்துவிடுவர். ஆனால், போக்குவரத்து காவலர்கள் எவ்வளவு வெயில் வெப்பத்தை உமிழ்ந்தாலும் அதை பொருட்படுத்தாமல் போக்குவரத்து சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு கடந்த 2012ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் மார்ச் முதல் ஜூன் வரையிலான 4 மாதங்கள் போக்குவரத்து காவலர்களுக்கு மோர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த வருடத்திற்கான மோர் வழங்கும் திட்டத்தின் தொடக்க நிகழ்வு இன்று நடைபெற்றது. ஜெமினி மேம்பாலம் பகுதியில் உள்ள அண்ணா ரோட்டரி சிக்னல் அருகே நடைபெற்ற இந்த விழாவில் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் காவலர்களுக்கு மோர் வழங்கி திட்டத்தை துவங்கி வைத்தார். மேலும், விழாவின் போது 5 சிறப்பு சுற்றுக்காவல் சுசுகி பைக்குகள் சென்னை போக்குவரத்து காவல்துறைக்கு வழங்கப்பட்டன. ஜப்பான் தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த பைக்குகள் ஒவ்வொன்றும் ரூ.2,50,000 மதிப்பு கொண்டது.