தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மே- 07 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்றும், நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்றும் தமிழக அரசு நேற்று (04/05/2020) அறிவித்திருந்தது.
அரசின் இந்த முடிவுக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னையில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குப்பட்ட பகுதியில் மே 7- ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது. சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளது.
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளும் சென்னை காவல்துறை எல்லைக்குள் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.