Skip to main content

மூடப்படாத காவல் நிலையம்... அச்சத்துடன் பணியாற்றும் போலீசார்...

Published on 18/06/2020 | Edited on 18/06/2020

 

சென்னையில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், போலீஸாரே மெத்தனமாகச் செயல்படுகின்றனரோ எனப் பரவலாக பேச்சு அடிபடுகிறது. 

 

ஒரு காவல் நிலையத்தில் ஒருவருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலே, அவரோடு தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, ஒரு வாரம் மூடப்படும். இந்த நடைமுறை தான் பல இடங்களில் பின்பற்றப்படுகிறது.

 

ஆனால், மாம்பலம் காவல் நிலையத்தில் இதற்கு நேர்மாறாக நடந்திருக்கிறது. இப்போதும் இயங்கி வருகின்றது.

 

கடந்த மாதம் தி.நகர் காவல் துணை ஆணையர் அசோக்குமாருக்கும், அவரது ஓட்டுனருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டது. அப்போது, டி.சி. அலுவலகம் முழுவதும் மருந்து தெளிக்கப்பட்டது. (மாம்பலம் காவல் நிலையத்தின் மேல் தளத்தில்தான் டி.சி. அலுவலகம் இயங்குகிறது) அவர்கள் இருவரும் குணமடைந்து பணிக்குத் திரும்பி விட்டனர். 

 

அதன் பிறகு ஏ.சி. அலுவலகத்தில் 2 பேருக்குத் தொற்று ஏற்பட்டதால், கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதுவும் மேல் தளத்தில்தான் இயங்குகிறது. 

 

இப்போது மாம்பலம் சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பாலமுரளி மற்றும் அவரது 2 ஓட்டுனர்கள், அவருடன் பணியாற்றிய 2 எஸ்.ஐ.-க்கள், 2 தலைமைக்காவலர் என 7 பேருக்குக் கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் இன்ஸ்பெக்டர் இன்று (17-06-2020) சிகிச்சை பலனின்றி காலமாகிவிட்டார். மற்ற 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

 

ஆனால், இன்னமும் மாம்பலம் காவல் நிலையம் மூடப்படாமல் வழக்கம்போல் செயல்படுகிறது. ஏனெனில் இந்தக் காவல் நிலையத்தின் வழியேதான் மேல் தளத்தில் உள்ள தி.நகர் டி.சி ஆபிஸ், ஏ.சி, ஆபிஸ், மாம்பலம் குற்றப்பிரிவு, போக்குவரத்துப் பிரிவு அலுவலகங்களுக்குச்ச் செல்ல வேண்டும். அதனாலேயே இந்தக் காவல் நிலையத்தை மூடாமல் தினமும் கிருமி நாசினி தெளித்துக் கொண்டிருக்கின்றனர்.
 

http://onelink.to/nknapp


என்னதான் கிருமி நாசினி தெளித்தாலும் இன்னும் எத்தனை பேருக்கு நோய்ப் பரவுமோ? என்ற ஒருவித அச்சம் அங்கு பணியாற்றும் காவலர்களிடையே ஏற்பட்டிருக்கிறது. 

 

 

சார்ந்த செய்திகள்