அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களின் கல்வியை பாதிக்கும் ஆன்லைன் வகுப்புகளை நிறுத்த கோரியும், பேரிடர் காலங்களில் வசூலிக்கப்படும் கல்வி கட்டணத்தை தடுக்க வலியுறுத்தியும், இவற்றை கண்டு கொள்ளாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் புதுச்சேரியில் கருப்பு துணியால் கண்ணை கட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி கல்வித்துறை வளாகம் முன்பாக புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் சீ.சு.சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், இன்றைய கரோனா பேரிடர் சூழலில் ஏழை, எளிய கிராமப்புற அரசு பள்ளி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளின் மூலமாக புறக்கணிக்கப்படுவது தொடர்பாகவும், கரோனா பேரிடர் காலங்களில் பள்ளிக் கல்வி கட்டணங்களை கட்ட பெற்றோர்களை நிர்ப்பந்தம் செய்யும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்காத கல்வித்துறையின் ஒருதலைபட்சமான அணுகுமுறையை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு இயக்க தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் பங்குபெற்றனர்.