திருச்சி கண்டோன்ட்மென்ட் பகுதியில் அமைந்துள்ள யூனியன் கிளப்-ஐ இடிப்பதற்காக இன்று காலை ஜே.சி.பி. இயந்திரம், பாதுகாப்பிற்காக காவல்துறையினர் அக்கிளப்பிற்கு முன்னால் குவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பானது.
திருச்சி கண்டோன்ட்மென்ட் பகுதியில் அமைந்திருக்கும் இந்த கிளப்-ன் வரலாறு என்ன என்று பார்ப்போம். கடந்த, 1907 ஆண்டு சமூகப் பணிக்காக அரசிடம் இருந்து ஓன்றரை ஏக்கர் நிலத்தை டி.தேசிகாச்சாரியார் உள்ளிட்ட சில நிர்வாகிகள் சேர்ந்து வாடகைக்குப் பெற்றனர். அதோடு பல்வேறு அறைகள் கொண்ட நல்ல உறுதியான ஒரு கட்டிடத்தைக் கட்டி அதற்கு ‘யூனியன் கிளப்’ என்று பெயரிட்டனர்.
சமூக தொண்டு செய்ய வாங்கப்பட்ட அந்த இடத்தில் மக்களுக்குத் தேவையான அடிப்படைப் பணிகளை செய்துகொடுத்து சேவை செய்துவந்தது. ஆனால், நாளடைவில் அது விளையாட்டு அரங்கமாக மாறிவிட்டது. 1907ல் இருந்து 1931 வரை தேசிகாச்சாரியாரே இந்த கிளப்பின் தலைவராக இருந்தார். சிவஞான முதலியார் இந்த கிளப்பின் செயலாளராக இருந்தார். ஆரம்பத்தில் 25 பணக்காரர்களையும், நில மிராசுதாரர்களையும், ஜமின்தாரார்களையும் கொண்டு துவங்கப்பட்ட இந்த கிளப்பில், தேர்தல் நடத்தி அதன்மூலம் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1907ல் துவங்கி இன்று வரை மொத்தம் 113 வருடங்கள் கடந்தும் இன்று அதன் வடிவமைப்பு மாறாமல் இருக்கிறது. மேலும், விளையாட்டுகளை மேம்படுத்தும் விதமாக டென்னிஸ், டேபுள் டென்னிஸ், பில்லியாட்ஸ், உள்ளிட்ட விளையாட்டுகள் மேம்படுத்தப்பட்டு, பல தேசிய அளவிலான வீரர், வீராங்கனைகளையும் உருவாக்கியது. ஆனால், நாளடைவில் இந்த கிளப் திருச்சி மாநகரில் உள்ள முக்கியப் புள்ளிகள், பணக்காரா்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் உறுப்பினர்களாகி, சூதாடுவது, மது அருந்துவது, உள்ளிட்ட பல்வேறு தவறான நடவடிக்கைக்குப் பயன்பட்டுவந்தது.
இதனால் கடந்த 2019ல் வருவாய்த்துறை, காவல்துறையினர் உள்ளிட்டவர்கள் இணைந்து இந்த கிளப்பில் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது இந்த கிளப்பில் சூதாடிக் கொண்டிருந்தவர்களை காவல்துறையினர் கைது செய்ததோடு அவர்கள் சூதாட வைத்திருந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர். இதற்கிடையில், இந்த கிளப் செயல்படுவதற்கான வாடகையை முறையாகச் செலுத்தவில்லை என்று கூறி கடந்த, 2021 பிப்ரவரி மாதம் வருவாய்த்துறை இந்த கிளப்பை பூட்டி சீல் வைத்தது. மேலும், அவர்கள் அந்த நிலுவைத் தொகையைச் செலுத்த கால அவகாசம் கொடுத்தும் எந்தவிதப் பணமும் செலுத்தாமல் இருந்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த 1970 வரை இந்த இடத்திற்கான வாடகையை முறையாகச் செலுத்திவந்த இந்த கிளப், 1971க்கு பிறகு வருவாய்த்துறைக்கு செலுத்தவேண்டிய தொகையை முறையாகச் செலுத்தாமல், நிலுவையில் போட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் இந்த கிளப்பின் செயலாளராக எம்.எச்.கான் மற்றும் தலைவராக யு.சி.சுரேந்திரநாத் உள்ளிட்டவர்கள் இருந்துள்ளனர். 1971 முதல் 2021 வரை என மொத்தம் 50 ஆண்டுகளாக இதற்கான வாடகை தொகை ரூ. 9 கோடி. அதனை முறையாகச் செலுத்தாமல் உள்ளனர். இந்த கிளப் ஆரம்பித்தபோது 25 நபர்களோடு துவங்கப்பட்டது. இன்று 450 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த கிளப்பில் மாத சந்தாவாக 5ஆயிரம் ரூபாய் வசூலிக்கின்றனர். கடந்த 2012 முதல் இந்த கிளப்பிற்கு என்று ஒரு முறையான தேர்தல் நடத்தி செயலாளர் மற்றும் தலைவர் தேர்ந்தெடுக்கப்படாமல் உள்ள நிலையில், வருவாய்த்துறையில் இருந்து தொடர்ந்து பல நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என்று தெரிவித்தனர்.
மேலும், அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் யூனியன் கிளப் கட்டிடத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும் மாநகராட்சி ஊழியர்களைக் கொண்டு வெளியேற்றப்பட்டு வருகிறது. அதோடு கட்டிடத்தை இடிப்பதற்கான ஆயத்தப்பணிகளும் துவங்கப்பட்டுள்ளது. இன்று காலை முதலே அந்த கிளப் கட்டிடத்தை இடிக்க ஜேசிபி இயந்திரம், லாரிகள் என வாகனங்கள் தயாராக உள்ளது. மேலும் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பிற்குக் காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், அப்பகுதி பரபரப்பாகக் காணப்பட்டது.