தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகிறனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
அதே சமயம் மிக்ஜாம் புயலால் ரயில் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கி சென்னை புறநகர் ரயில்கள் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் நாளை (07.12.2023) முதல் சென்னை புறநகர் மின்சார ரயில்கள் வழக்கம்போல் உரிய அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி இடையேயான புறநகர் ரயில்கள் சேவை நாளை முதல் வழக்கம்போல் இயங்கும். மேலும் திருவொற்றியூர் - சூலூர்பேட்டை, கும்மிடிப்பூண்டிக்கு 30 நிமிடங்களுக்கு ஒரு முறை என சிறப்பு புறநகர் ரயில்கள் இயக்கப்பட உள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.