தியாகதுருகம் புறவழிச்சாலையில் கடந்த மூன்று மாதங்களில் நடைபெற்ற விபத்தில் மொத்தம் 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 29 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் எப்பொழுதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக உள்ளது. இந்நிலையில் சென்னையிலிருந்து சேலம் மற்றும் கோவை ஆகிய நகரங்களுக்கு அரசு பேருந்துகள், சொகுசு பேருந்துகள், லாரிகள், கார்கள் ஆகியவை வந்து செல்கின்றன. இவ்வாறு வரும் வாகனங்கள் தியாகதுருகம் புறவழிச்சாலையில் புக்குளம் மேம்பாலம் மற்றும் விருகாவூர் மேம்பாலம் ஆகிய இரண்டு மேம்பாலங்களில் முன்னால் செல்லும் வாகனங்களை முந்திச் செல்ல முயலும் போது விபத்துக்கள் ஏற்படுகின்றன.
மேலும் நான்கு வழிச்சாலையில் வரும் வாகன ஓட்டிகள் திடீரென புறவழிச்சாலையில் (இரண்டுவழி சாலையில்) வருவதால் எதிரே வரும் வாகனங்களின் முகப்பு விளக்குகளால் நிலைதடுமாறி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இவ்வாறு கடந்த ஜூன் மாதம் 13ஆம் தேதி லாரி மீது பஸ் மோதியதில் மூன்று பேர் உடல் நசுங்கி பலியானார்கள், 4 பேர் படுகாயமடைந்தனர். அதன் தொடர்ச்சியாக ஜூலை 18 ஆம் தேதி லாரி மோதி தொழிலாளி ஒருவர் பலியானார். மேலும் ஆகஸ்ட் 13- ஆம் தேதி பஸ் மீது கார் மோதியதில் கணவன் மனைவி படுகாயம் அடைந்தனர். செப்டம்பர் 2 ஆம் தேதி லாரி மீது ஆம்னி பஸ் மோதியதில் டிரைவர் பலியானார் 21 பேர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் நேற்று காலை கார் சாலையோர ஒடை பள்ளத்தில் கவிழ்ந்ததில் 4 பேர் பலியானார் 2 பேர் படுகாயம் அடைந்தனர். கடந்த மூன்று மாதங்களில் தியாகதுருகம் புறவழி சாலையில் விபத்தில் சிக்கி 9 பேர் பலியாகினர், 29 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
எனவே தியாகதுருகம் புறவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றினால் மட்டுமே விபத்துகள் குறையும். மேலும் தற்காலிகமாக புறவழிச்சாலையில் ஒளிரும் தன்மை கொண்ட வேகத்தடைகளை அமைத்து வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தி விபத்துக்கள் நடைபெறுவதை குறைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுக்கின்றனர். அதேபோல் உளுந்தூர்பேட்டை- சேலம் தேசிய நெடுஞ்சாலை எண் 7. இந்த சாலை நான்கு வழிச்சாலையாக ஆரம்பிக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டது. ஆனால் எலவாசனூர் கோட்டை .தியாகதுருவம், கள்ளக்குறிச்சி. சின்னசேலம், ஆகிய நகரங்கள் வழியே செல்லும் புறவழிச்சாலை பகுதிகளில் இரு வழிச்சாலை மட்டும் போடப்பட்டுள்ளது. நான்கு வழிச்சாலைக்கு தேவையானஅளவில் திட்ட மதிப்பீடுகள் போடப்பட்டது.
அதற்காக தண்ணீர் செல்லும் பாலங்கள் கூட அகலப்படுத்தப்பட்டு கட்டப்பட்டுள்ளன. ஆனால் சாலையை மட்டும் இரு வழி சாலையாக குறுக்கி போட்டுவிட்டனர். உளுந்துார்பேட்டை- சேலம் வழிகளில் இருந்து எதிரும், புதிருமாக வரும் வாகனங்கள் நான்கு வழி சாலைதான் என்று வேகமாக வருகிறார்கள். அப்படி வரும் போது திடீர் என்று இரு வழி சாலையாக குறுகியுள்ளதால் வாகன ஓட்டிகள் தெரியாமல் வாகனங்கள் மோதிக் கொள்வதும் நிலை தடுமாறியும் விபத்துகள் ஏற்பட்டு விலை மதிப்பற்ற மனித உயிர்கள் பலியாகி வருகின்றன.
நான்கு வழி சாலை முழுமையாக போட்டுவிட்டதாக கணக்கு காட்டிவிட்டு புறவழி சாலைகளில் மட்டும்இரு வழி சாலையாக போட்டதன் மூலம் கோடிக்கணக்கில் பணமோசடி நடந்திருக்குமோ? என்கிறார்கள் இப்பகுதி மக்கள். டோல்கேட்டுகளில் அடிக்கடி வாகன கட்டணங்களை உயர்த்தி பணம் பிடுங்கும் மத்திய அரசின் தரை வழி போக்குவரத்து துறை இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறது மனித உயிர்களை பறிக்கும் துறையாக உள்ளதா? தேசிய நெடுஞ்சாலை துறை என்கிறார்கள் மக்கள்.