ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உணவு விநியோகம் செய்யும் தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் கடந்த 22 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இது தொடர்பாக தமிழ்நாடு உணவு மற்றும் இதர பொருட்கள் விநியோகிக்கும் ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணா நேற்று (23.05.2023) செய்தியாளர்களிடம் கூறுகையில், "போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முக்கிய ஊழியர்களின் ஐடி-களை நிர்வாகம் முடக்கி உள்ளது. சென்னை மண்டலத்தில் 90 விழுக்காடு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நிர்வாகம் தற்காலிக ஊழியர்களை நியமித்தும் டெலிவரி வழங்க முடியவில்லை.
ஒரு ஆர்டருக்கு 20 ரூபாய் கூலி கொடுத்த நிர்வாகம் 100 ரூபாய் கொடுத்தாலும் புதிய ஊழியர்களால் டெலிவரி செய்ய முடியவில்லை. நிர்வாகத்திற்கு ஆதரவாக காவல்துறை செயல்படுகிறது. வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுத்து முறைப்படி வேலை நிறுத்தம் செய்கிறோம். ஆனாலும் நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு வர மறுக்கிறது. எனவே தொழிலாளர் நலத்துறை இதில் தலையிட்டு தீர்வு காண வலியுறுத்துகிறோம்" எனக் கூறினார்.