தமிழகத்தில் துப்பாக்கியால் சுட்டு போலீசார் தற்கொலை செய்துகொள்வது வாடிக்கையாகிவிட்டது. தவிர்க்க முடியாததாகவும் இருக்கிறது.
கடந்த ஆண்டு மார்ச் 4-ஆம் தேதி அதிகாலை, சென்னை மெரீனா – ஜெயலலிதா சமாதியில் பாதுகாப்பு பணியில் இருந்த அருண்ராஜ் என்ற போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அடுத்த 48 மணி நேரத்தில், அதாவது மார்ச் 7-ஆம் தேதி அதே பாணியில் அயனாவரம் எஸ்.ஐ. சதீஷ்குமார், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர்களது சாவுக்கு என்ன காரணம் என்னவென்பது, இதுவரையிலும் இருவரது குடும்பத்தினருக்கே தெரியவில்லை.
இன்று அதிகாலை, சென்னையில் ஆயுதப்படைக் காவலர் மணிகண்டன் (27) துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்திருக்கிறார். கீழ்ப்பாக்கத்தில் சிறப்பு காவல்படை ஐஜி அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த அவர், எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. இத்தனைக்கும் இன்று அவருக்குப் பிறந்தநாள். பிறந்த நாளே அவருக்கு இறந்த நாளாகிப் போனது உறவினர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
திருமணத்திற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், மணிகண்டனின் மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. அவரது முடிவுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், “விபரீத சிந்தனைக்கு அவர் தள்ளப்பட்டது ஏன்? பணிச்சூழலும் வேலைப் பளுவும்தான். இதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது ..” என்கிறார்கள் சக காவலர்கள்.
திருச்சியில் முத்து என்ற போலீஸ்காரர் நேற்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரும் மன உளைச்சலால் இந்த முடிவை எடுத்ததாகச் சொல்லப்படுகிறது. ஆக, பணியில் இருக்கும் பெரும்பாலான போலீசார் ஒருவித மன இறுக்கத்திற்கு ஆளாகி இருக்கின்றனர் என்பது மறுக்க முடியாது உண்மை. சில மாதங்களுக்கு முன்னர் அனைத்து போலீசாருக்கும் யோகா என்பதை கட்டாயமாக்கினார் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன். ஆனால், அந்தப் பயிற்சி வகுப்புகள் சில நாட்களே நீடித்தன.
போலீசாருக்கும் ஓய்வு அவசியம். அவர்கள், தங்கள் குடும்பத்தினரோடு உறவாட, குழந்தைகளோடு கொஞ்சிப் பேச, கட்டாயம் விடுப்பு கொடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கை நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வந்தாலும், தீர்வு தான் இல்லை. இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டுமென்றால், காலிப் பணியிடங்களை உடனே நிரப்பவேண்டும், பணியில் இருப்பவர்களுக்குக் கட்டாயம் மாதத்தில் ஒருநாளாவது விடுப்பு தர வேண்டும். எல்லா போலீசாருக்கும் யோகா மற்றும் மனத்திறன் பயிற்சி அளிப்பது அவசியம்.
ஈரமில்லா நெஞ்சத்துடன் தமிழக அரசு தொடர்ந்து செயல்பட்டால், காவல்துறை தோட்டாக்கள் காவலர்கள் உயிரை மாய்த்துக்கொள்வதற்காக, ஒவ்வொன்றாகத் தீர்ந்துபோவது நிச்சயம்.!