பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே குட்கா விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக காவல்துறை மேற்கொண்டு வருகிறது. கடந்த மாதம் தமிழகத்தின் பல இடங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே உள்ள கடைகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில் புகையிலை, பான்மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 950 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 971 நபர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னையிலும் பல இடங்களில் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் 'drive against tabacco' என்ற பெயரில் சிறப்பு சோதனை நடத்த காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அருகே உள்ள கடைகளில் குட்கா விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 கிராம் குட்கா பொருட்கள் வைத்திருந்தால் கூட அந்த நபரை சோதனை செய்து, அவருடைய வீட்டையும் சோதனை செய்து, யாரிடமிருந்து அந்த குட்கா வாங்கப்பட்டது விவரங்களை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையில் போதைப் பொருள் மற்றும் குட்கா பொருட்கள் விற்பனையை முடக்க காவல்துறை நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அதன் முதற்கட்டமாக இந்த சிறப்பு சோதனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.