Skip to main content

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி; மூவர் மீது வழக்குப்பதிவு

Published on 29/04/2023 | Edited on 29/04/2023

 

chennai municipal corporation fake job appointment letter related issue 

 

சென்னை மாநகராட்சியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி போலி பணி நியமன ஆணை வழங்கிய  மூன்று பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

சேலம் அரிசிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜன். இவருடைய மனைவி சுதா (வயது 40). இவர்களுடைய மகள் ஜோதி. பட்டப்படிப்பு முடித்துள்ள இவர், அரசாங்கப் பணிக்காக முயற்சி செய்து வந்தார். இந்நிலையில் சுதா சேலம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரை அணுகி தனது மகளுக்கு அரசு வேலைக்கு ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர், இது தொடர்பாக 3 சாலை பகுதியில் நீட் தேர்வு பயிற்சி மையம் நடத்தி வரும் சின்னான் என்பவரை அணுகுமாறு அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். அதையடுத்து சுதா சின்னானை நேரில் சந்தித்து மகளுக்கு அரசு வேலை தொடர்பாகப் பேசினார். அப்போது அவரும் மாரமங்கலத்துப்பட்டியைச் சேர்ந்த கவுதம் என்பவருக்கு தான் அப்போது இருந்த ஆளுங்கட்சியினருடனும் அதிகாரிகளுடனும் நெருங்கிய பழக்கம் இருக்கிறது. அவர்தான் அரசாங்க வேலை வாங்கித் தருவார் என்று கூறி அவருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

 

இதன் அடுத்தகட்டமாக சுதா கடந்த 2021ம் ஆண்டு சின்னான் நடத்தி வந்த நீட் பயிற்சி மைய அலுவலகத்திற்குச் சென்றார். அங்கு கவுதமும் இருந்தார். அப்போது சுதாவைப் போல் சேலம் மெய்யனூரைச் சேர்ந்த விஜயகுமார், இரும்பாலையைச் சேர்ந்த மேஜர் சுந்தர்ராஜன், அரக்கோணத்தைச் சேர்ந்த ஹரீஷ் நாகராஜ் ஆகியோரும் அரசாங்க வேலை பெறுவது தொடர்பாக சின்னானையும் கவுதமையும் சந்திக்க வந்திருந்தனர். அவர்களிடம் கவுதமும் சின்னானும் சேர்ந்து, ''தங்களுக்கு தெரிந்த ஆட்கள் சென்னை மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளர் பணிக்கு வேலை ஏற்பாடு செய்து தருகிறார்கள். இதற்காக ஒவ்வொருவரும் தலா 10 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். பணம் கொடுத்தால் மூன்றே மாதத்தில் பணி நியமன ஆணை வீடு தேடி வரும்'' என்று தெரிவித்துள்ளனர். அவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பிய சுதா உள்ளிட்ட நான்கு பேரும் அவர்கள் கேட்டபடியே தலா 10 லட்சம் ரூபாயை கொடுத்தனர்.

 

இதையடுத்து 2021ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி சுதா உள்ளிட்ட 4 பேரின் வாட்ஸ்ஆப் எண்களுக்கும் அவர்கள் யாருக்கு வேலை கேட்டனரோ அவர்களின் பெயர்களில் பணி நியமன ஆணையை அனுப்பி வைத்தனர். தாங்கள் எதிர்பார்த்தபடியே அரசு வேலை கிடைத்து விட்டது என்ற ஆசையுடன் சுதாவின் மகள் மற்றும் பணம் கொடுத்த சிலரும் வாட்ஸ்ஆப்பில் வந்த பணி நியமன ஆணையுடன் சென்னைக்குக் கிளம்ப ஆயத்தம் ஆனார்கள்.

 

அப்போது கவுதமும் சின்னானும் அவர்களை திடீரென்று தொடர்பு கொண்டு கொரோனா பரவல் காரணமாக தற்போது பணி நியமனத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளதாகவும் சென்னை மாநகராட்சியில் இருந்து அழைப்பு வரும்போது நேரில் சென்றால் போதுமானது என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் நால்வரும் பணி நியமன ஆணை குறித்து விசாரித்தனர். இதில், அவர்கள் அனுப்பி வைத்த பணி நியமன ஆணை கடிதங்கள் போலியானது என்பது தெரிய வந்தது. சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவருடன் சேர்ந்து கொண்டு கவுதம் போலியாக பணி நியமன ஆணைகளை தயாரித்துள்ளது தெரிய வந்தது.

 

தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுதா உள்ளிட்ட நான்கு பேரும் இதுகுறித்து சேலம் மாநகர காவல்துறை ஆணையர் விஜயகுமாரியிடம் புகார் அளித்தனர். இந்த புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி மத்திய குற்றப்பிரிவுக்கு ஆணையர் உத்தரவிட்டார். அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் புஷ்பராணி விசாரித்தபோது புகாரில் முகாந்திரம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சென்னை மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளர் பணி வாங்கித் தருவதாகக் கூறி 4 பேரிடம் 40 லட்சம் ரூபாய் சுருட்டியதோடு போலி பணி நியமன ஆணை வழங்கிய சின்னான், கவுதம், மகேஸ்வரி ஆகியோர் மீது மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த புகார் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. 

 


 

சார்ந்த செய்திகள்