Skip to main content

10 கோடி ரூபாய் செல்ஃபோன் கொள்ளையில் மத்தியப்பிரதேச கும்பலுக்குத் தொடர்பு? தனிப்படை தீவிர விசாரணை!

Published on 23/10/2020 | Edited on 23/10/2020

 

chennai mobiles container police investigation

 

கிருஷ்ணகிரி அருகே, கண்டெய்னர் லாரியைக் கடத்தி, பத்து கோடி ரூபாய் பெறுமானமுள்ள செல்ஃபோன்களை கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கும்பலுக்குத் தொடர்பு இருக்கலாம் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

சென்னையில் உள்ள தனியார் செல்ஃபோன் கம்பெனியில் இருந்து, மும்பையில் உள்ள ஷோரூம்களுக்கு விநியோகம் செய்வதற்காக ஒரு கண்டெய்னர் லாரியில் 10 கோடி ரூபாய் பெறுமானமுள்ள ரெட்மி ரக செல்ஃபோன்கள் ஏற்றப்பட்டன. இந்த லாரி, அக். 20- ஆம் தேதி இரவு புறப்பட்டது. சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த சதீஷ்குமார் (29), கோவையைச் சேர்ந்த அருண் (26) ஆகியோர் ஓட்டுநர்களாக இருந்தனர்.

 

இந்த லாரி, புதன்கிழமை (அக். 21) அதிகாலை 03.00 மணியளவில், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த மேலுமலை பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது, அந்த வழியாக வந்த மூன்று லாரிகள் திடீரென்று செல்ஃபோன் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியை வழிமறித்து நின்றது. அந்த லாரிகளில் இருந்து இறங்கிய 20க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள், சதீஷ்குமார், அருண் ஆகியோரை சரமாரியாகத் தாக்கினர். பின்னர் அவர்கள் இருவரையும் கண்களைக் கட்டி, அப்பகுதியில் உள்ள ஒரு புதருக்குள் தள்ளிவிட்டு, கண்டெய்னர் லாரியைக் கடத்திச் சென்றனர்.

 

புதருக்குள் தள்ளிவிடப்பட்ட இருவரும் எழுந்து தப்பிச் சென்று விடக்கூடாது என்பதற்காக மர்ம கும்பலைச் சேர்ந்த இருவர் அங்கேயே விடியும் வரை காவலுக்கு இருந்துள்ளனர். காலையில் அவர்களின் கண்களில் கட்டியிருந்த துணியை அவிழ்த்துவிட்டு அங்கிருந்து மர்ம நபர்கள் இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.

 

இதையடுத்து, பலத்த காயம் அடைந்த ஓட்டுநர்கள் இருவரும் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். நடந்த சம்பவத்தை அறிந்த ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்தான் இதுகுறித்து முதலில் சூளகிரி காவல்துறையினருக்குத் தகவல் அளித்தார்.

 

இதையடுத்து, காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். முதல்கட்ட விசாரணையில், கடத்திச் செல்லப்பட்ட கண்டெய்னர் லாரி, கிருஷ்ணகிரி மாவட்டம் அலகுபாவி என்ற இடத்தில் நின்று கொண்டிருப்பதும், அதில் இருந்த 10 கோடி ரூபாய் பெறுமானமுள்ள செல்ஃபோன்களை மர்ம கும்பல் வந்த மூன்று லாரிகளில் ஏற்றிக்கொண்டு தப்பி ஓடியிருப்பதும் தெரிய வந்துள்ளது. அதையடுத்து, கண்டெய்னர் லாரியை காவல்துறையினர் மீட்டனர்.

 

கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி பண்டிகங்காதர், மேற்கு மண்டல ஐ.ஜி பெரியய்யா, சேலம் சரக டி.ஐ.ஜி பிரதீப்குமார் ஆகியோரின் உத்தரவின்பேரில், டி.எஸ்.பி முரளி தலைமையில் 9 தனிப்படை குழு அமைக்கப்பட்டது.

 

cnc

 

இந்தக் கடத்தலில் மத்தியப்பிரதேச மாநிலம் தீவாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த அங்கித்ஜான்ஜா என்ற கொள்ளை கும்பலுக்குத் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

 

கொள்ளை கும்பல் அண்டை மாநிலங்களில் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், தனிப்படை காவல்துறையினர் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மஹாராஷ்டிரா மற்றும் ஓடிசா ஆகிய மாநிலங்களில் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்