சென்னையில் காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை மெட்ரோ ரயில் ஓடும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் மெட்ரோ ரயில் சேவை விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "செப்டம்பர் 7- ஆம் தேதி முதல் சென்னை விமானம் நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரயில் இயக்கப்படும். செப்டம்பர் 9- ஆம் தேதி முதல் புனித தோமையார் மலை- சென்ட்ரல் வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். பரங்கிமலை- சென்ட்ரல் வரையிலான மெட்ரோ ரயில் சேவை செப்டம்பர் 9- ஆம் தேதி தொடங்கும். அலுவலக நேரமான காலை 08.30- 10.30, மாலை 05.00- 08.00 வரை 5 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். அலுவலக நேரம் இல்லாத மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
காற்றோட்டத்திற்காக, ஒவ்வொரு மெட்ரோ ரயில் நிலையத்திலும் 20 விநாடிகளுக்கு பதிலாக 50 விநாடிகள் மெட்ரோ ரயில் நிற்கும். ஸ்மார்ட் கார்டு மற்றும் QR ஸ்கேன் முறையில் டிக்கெட் வழங்கப்படும். லிப்ட்டில் ஒரே நேரத்தில் அதிகபட்சம் மூன்று பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர். தனி மனித இடைவெளியைப் பின்பற்றும் வகையில், ரயில் இருக்கைகளில் ஒரு இருக்கை இடைவெளி விட்டு பயணிகள் அமர வேண்டும்." இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.