கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நெல்லையில் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கச் சென்ற பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ''தமிழகத்திற்கு முதற்கட்டமாக 2000 கோடி ரூபாய் வெள்ள நிவாரணத்தை மத்திய அரசு வழங்க வேண்டும். சுதந்திரத்திற்கு முன்பு உள்ள நிலை இப்போதும் உள்ளதால் சென்னை வானிலை ஆய்வு மையத்தை மூடிவிடலாம். சென்னை வானிலை ஆய்வு மையம். தேவையில்லை அது வேஸ்ட்.
இந்த வேலையை ஐந்தாவது படிக்கிற பையன் பண்ணிவிட்டு போவான். இவங்க என்ன பண்ணுவாங்க, தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும், சில மாவட்டங்களில் கொஞ்சம் கனமழை பெய்யும், ஒரு சில மாவட்டங்களில் காற்றுடன் மழை பொழியும். இது எங்களுக்கு தெரியாதா? அது நீங்க சொல்லித்தான் எங்களுக்கு தெரியுமா? அதுக்கு எதுக்கு நீங்க தொழில்நுட்பம் வச்சிருக்கீங்க. உலகம் முழுவதும் நவீன தொழில்நுட்பத்திற்கு மாறிக்கொண்டு வருகிறது. இன்னும் நீங்கள் சுதந்திரத்திற்கு முன்பு என்ன நிலையோ அதே நிலையில் தான் இருக்கிறீர்கள்'' என்றார்.