பெருநகர சென்னை மாநகராட்சியில் 200 கோட்டங்களிலும், 7 அரசு மருத்துவமனைகளிலும் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் துவங்கப்பட்ட 388 அம்மா உணவகங்கள் தற்போது தொடர்ந்து செயல்பட்டு ஏழை எளியோருக்குப் பயனளிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்து வருகின்றது. மேலும் அம்மா உணவகங்களின் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக சுமார் ஒரு லட்சத்து ஐயாயிரம் பயனாளிகள் உணவு அருந்தும் நிலையில், ஒரு ஆண்டில் சுமார் நான்கு கோடி முறை உணவு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி 122ஆவது வார்டில் உள்ள தேனாம்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அம்மா உணவகம் செயல்படும் முறை, வழங்கப்படும் உணவின் தரம் ஆகியவற்றைச் சோதனை செய்தார். இதனை, “கடந்த மூன்றாண்டுகளில் எத்தனை முறை உணவின் தரத்தை அதிகாரிகளோ, திமுக அமைச்சர்களோ சோதித்தனர் என்று முதலமைச்சர் விளக்குவாரா ? ஆய்வு செய்வதாக ஒரு நாடகத்தை 19.7.2024 அன்று திமுக அரசின் முதலமைச்சர் அரங்கேற்றியுள்ளார்” என்று எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், சென்னை மேயர் பிரியா ராஜன் தனது சமூக வலைத்தள பக்கத்தில், “திமுக ஆட்சியில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்த முதலமைச்சரின் பெருந்தன்மையைப் பாராட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மனமில்லை. கட்சி மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு தமிழ்நாட்டின் தனிப்பெருந்தலைவராக, மக்கள் நலன் ஒன்றையே மனதில் வைத்து நாளும் தொண்டாற்றும் மனிதநேயராக முதலமைச்சர் திகழ்கிறார்கள்; அவரது அகராதியில் அரசியல் காழ்ப்புணர்வு என்ற சொல்லோ, சிறுமதியோ ஒருநாளும் இருந்தது இல்லை.
திமுக அரசால் தொடங்கப்பட்டது என்பதற்காகவே புதிய தலைமைச் செயலகம் உட்பட அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்ட திட்டங்கள் எத்தனை எத்தனை என்பதை மக்கள் அறிவர். அதனைப் பற்றி கொஞ்சமும் கூச்சமின்றி பொறாமையிலும் ஆற்றாமையிலும் எதிர்க்கட்சித் தலைவர் புலம்பித் தவிக்கிறார்.” என்று கடுமையாகச் சாடியுள்ளார்.