சென்னை பூந்தமல்லி அடுத்துள்ளது காட்டுப்பாக்கம். இந்த பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரது 17 வயது மகள் மீனா. இவரை நேற்று திருவண்ணாமலையைச் சேர்ந்த குப்பன் என்பவரது மகன் சண்முகம் வயது 41 என்பவர் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்வதாக பல்வேறு பகுதி போலீசாருக்கும் சென்னையிலிருந்து தகவல் தரப்பட்டுள்ளது.
அந்த தகவல் திண்டிவனம் ரோசனை போலீசாருக்கும் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து ரோசனை போலீசார் நேற்று மாலை திண்டிவனம் காலேஜ் ரோட்டில் பாஞ்சாலம் கூட்டுரோடு செஞ்சி திருவண்ணாமலை செல்லும் பிரிவு சாலை அருகில் உதவி ஆய்வாளர் வினோத், காவலர்கள் ராஜேஷ், சாமிநாதன் ஆகியோர் கொண்ட டீம் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியாக பைக்கில் வேகமாக வந்த நபரை மடக்கிப் பிடித்து விசாரித்துள்ளனர்.
விசாரணையில் அவர் முரண்பாடாக பதில் அளிக்கவே அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். அதில் அவர் சென்னையில் மீனா என்ற இளம்பெண்ணை கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்க நகைகளை எடுத்துக்கொண்டு திருவண்ணாமலை நோக்கி டூவீலரில் தப்பி செல்வது தெரியவந்தது. இதையடுத்து ரோசணை போலீசார் கொலையாளியை பாதுகாப்பாக வைத்துக்கொண்டு சென்னை நாசரேத் பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் விஜயரங்கன், பூந்தமல்லி உதவி ஆய்வாளர் சுரேஷ் ஆகியோருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் அங்கிருந்து திண்டிவனம் ரோசனை காவல் நிலையம் வந்து சேர்ந்தனர். அவர்களிடம் கொலையாளி சண்முகத்தையும் அவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தையும் ஒப்படைத்தனர். பின்னர் பூந்தமல்லி போலீசார் சண்முகத்தை கைது செய்து மேற்கொண்டு விசாரணை செய்ய சென்னை அழைத்து சென்றுள்ளனர். கொலை செய்த சில மணி நேரங்களிலேயே கொலையாளியை போலீசார் பிடித்து கொடுத்த திண்டிவனம் ரோசனை போலீசாருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.