Skip to main content

எந்த விதியின் அடிப்படையில் கரோனா பாதித்தவர் வீடுகளில் தகரம் அடிக்கப்படுகிறது?- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

Published on 07/10/2020 | Edited on 07/10/2020

 

chennai high court tamilnadu government coronavirus treatment peoples

 

 

கரோனா தொற்று பாதிக்கப்பட்டவரின் வீடு மற்றும் பகுதிகளில் தகரம் அடிக்கப்படுவதன் காரணம் என்னவென்று, சென்னை மாநகராட்சியிடம்  சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

 

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரியங்கா தாக்கல் செய்த மனுவில், என்னுடைய கணவருக்கு அறிகுறியே இல்லாத கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள்,  எங்களிடம் எங்கு சிகிச்சை பெறுகிறீர்கள் என்ற ஒப்புதலைக்கூட கேட்காமல், என்னுடைய கணவரை சிகிச்சை அளிப்பதற்காக வலுக்கட்டாயமாக மையத்திற்கு அழைத்து சென்றனர். அவர்கள் அழைத்து சென்ற கரோனா சிகிச்சை மையத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. தனிமனித இடைவெளியும் பின்பற்றப்படவில்லை. என் கணவரை மையத்திற்கு அழைத்து சென்ற பின், என் வீட்டை தகரம் வைத்து அடைத்துவிட்டனர்.

 

அறிகுறி இல்லாத மற்றும் குறைவான அறிகுறியுடன் கரோனா பாதிப்பு உள்ளவர்களை, கரோனா மையத்தில்தான் சிகிச்சை பெற வேண்டுமென்று கட்டாயப்படுத்தக்கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரியுள்ளார்.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு, கரோனா பாதிக்கப்பட்டவரின் வீடு மற்றும் அந்தப் பகுதியில் தகரம் அடிக்கப்படுவதன் காரணம் என்ன? என்ன விதியின் அடிப்படையில் தகரம் அடிக்கப்படுகிறது எனக் கேள்வி எழுப்பி, மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசு மற்றும் மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்